நெய்வேலி விமான நிலையத்துக்கு உரிமம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துவது உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் நவீனப்படுத்த வேண்டி கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் திமுக எம்பி வில்சன் உரையாற்றினார். இவரது உரைக்கு விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங் பதிலளித்துள்ளார்.
வி.கே.சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை விமான நிலையத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2467 கோடி மதிப்பில் புதிய டெர்மினல் அமைப்பதற்கு வேலைகள் நடைபெற்று வருகிறது. மதுரை விமான நிலையத்தை பொறுத்தவரை அதிக சரக்குகள் அனுப்பப்படும் விமான நிலையமாக உள்ளது. தற்போது கொழும்பு, துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இங்கிருந்து விமான சேவை உள்ளது.
மத்திய அரசு மெட்ரோ நகரங்கள் தவிர்த்த நகரங்களில் சர்வதேச விமான போக்குவரத்தை ஊக்குவித்து வருகிறது. இருப்பினும் இந்தியாவின் எந்தவொரு மூளையிலிருந்தும் சர்வதேச விமான சேவையை தொடங்குவது என்பது வர்த்தக ரீதியான முடிவுதான். வர்த்தக ரீதியாகவே விமான நிறுவனங்கள் சர்வதேச சேவை குறித்து முடிவுகளை எடுத்து வருகின்றன.
அண்மைச் செய்தி: ஏக்நாத் ஷிண்டேவுக்கு ‘சிவ சேனா’ – அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்
நெய்வேலி விமான நிலையத்திற்கு உரிமம் வழங்கும் பணி தொடங்கப்பட்டள்ளது. தஞ்சாவூர் விமானநிலையத்தை மேம்படுத்துவது தொடர்பாக இந்திய விமான படைக்கும் இந்திய விமான ஆணையத்துக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் தனது பதிலில் கூறியுள்ளார்.







