ஒரு நாட்டின் இளைஞர்களால் தான் அதன் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்த குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, இந்தியா உலகின் முன்னணி நாடாக உருவெடுக்கும் வாசலில் நிற்கிறது என தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை கட்டுப்பாட்டின் கீழ் மற்றும் 164 ஆண்டுகாலமாக இயங்கி வரும் லாரன்ஸ் சர்வதேச பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, இந்தியாவின் எதிர்காலத்திற்கான ஒரு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் வாசலில் இருக்கும் இளம் மாணவர்களுடன் பிரகாசமாக பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்றார்.
இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்ற வெங்கையா நாயுடு, ஒரு நாட்டின் இளைஞர்களால் தான் அதன் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இந்தியா முன்னணி நாடாக உருவெடுக்கும் வாசலில் நிற்கிறது, உங்கள் எதிர்காலமும் நமது தேசத்தின் எதிர்காலமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது என்பதை சொல்லவேண்டியதில்லை என்றார். தொழில்நுட்ப வளர்ச்சியுடன் உண்மையில் தேசிய வாழ்வில் அனைத்து துறைகளிலும் அடுத்த தலைமுறையாக நாம் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் நீடிக்காமல், இந்தியாவைப் பற்றி உலகமே பேசும் அளவிற்கு புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.








