காவல்துறையின் கொடூரங்களை மீண்டும் கண் முன் கொண்டுவரும் விடுதலை 1 – திரை விமர்சனம்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்து இன்று வெளியாகியுள்ள விடுதலை படத்தின் பாகம் 1 திரைப்படத்தின் குறித்து விரிவாக பார்ப்போம். தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதல் முறையாக…

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்து இன்று வெளியாகியுள்ள விடுதலை படத்தின் பாகம் 1 திரைப்படத்தின் குறித்து விரிவாக பார்ப்போம்.

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்துள்ள படம் விடுதலை. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சூரி, பவானி ஶ்ரீ, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை மையமாக கொண்டு வெற்றிமாறன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

அசுரன் படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் உருவாகி உள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பை வெற்றிமாறன் பூர்த்தி செய்தாரா என்றால் நிச்சயம் பூர்த்தி செய்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

அருமபுரி என்ற மலைப்பகுதியில் மலையை வெட்டி எடுக்க தனியார் நிறுவனத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான வேலைகளில் அந்த தனியார் நிறுவனம் ஈடுபட முயற்சி செய்து வரும் நிலையில் மலைகளை வெட்டி எடுக்கக் கூடாது என மக்கள் படை அதனை எதிர்த்து போராடுகின்றனர். மக்கள் படையை பெருமாள் என்கிற வாத்தியார் வழி நடித்தி செல்வார். அந்த மக்கள் படையை ஒடுக்கவும், தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாகவும் அரசு பல்வேறு முயற்சிகளை செய்யும்.

காவல்துறையை ஏவி மக்கள் படை தலைவன் பெருமாளை பிடிக்க அரசு முயற்சி செய்யும். காவல்துறையால் அந்த மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன ? அந்த ஊர் மக்களை காவல்துறை அதிகாரிகள் என்ன செய்தார்கள், மக்கள் படை தலைவனை பிடித்தார்களா இல்லையா என்பது தான் விடுதலை முதல் பாகத்தின் கதை.

நகைச்சுவை நடிகராக மட்டும் இதுவரை நம்மை அசர வைத்த சூரி விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாகவும் நம்மை பிரமிக்க வைத்துள்ளார். இரக்கமற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் இரக்கமுள்ள கான்ஸ்டபிளாக ஒரு நல்ல மனிதனாக பல இடங்களில் நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கிறார். காதல் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள், சென்டிமென்ட் என ஒரு வித்தியாசமான நடிகனை வெற்றிமாறன் நமக்கு கொடுத்துள்ளார்.

நாயகியாக நடித்துள்ள பவானி ஶ்ரீ தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் செய்துள்ளார். குறிப்பாக எமோஷ்னல் காட்சிகளில் அவரது நடிப்பு மிகச் சிறப்பு. விடுதலை முதல் பாகத்தில் விஜய் சேதுபதி சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ஒரு பவர்புல் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். வழக்கமான விஜய் சேதுபதியாக இல்லாமல் வெற்றிமாறனின் வாத்தியாராக விஜய் சேதுபதி அசத்தியுள்ளார். அவரது வார்த்தையில் இருந்து வரும் வசனங்கள் எல்லாம் அரசை கேள்வி கேட்கிறது.

சேத்தன் மற்றும் கௌதம் மேனன் இருவரும் காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை தனது வில்லத்தனத்தில் சேத்தன் பயமுறுத்துகிறார். கௌதம் மேனன் நடிப்பை பற்றி சொல்லவே தேவை இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் வித்தியாசமான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கொடூரமான காவல்துறை அதிகாரிகளை நம் கண் முன் கொண்டு வந்துள்ளார் கௌதம் மேனன்.

வெற்றிமாறன் படங்கள் என்றாலே நிச்சயம் நம்பகத்தன்மை இருக்கும். நம்மை ஏமாற்ற மாட்டார் என்ற உணர்வு இருக்கும். அந்த உணர்வு இந்த படத்திலும் வெளிப்படுகிறது. வெற்றிமாறனின் தனிச்சிறப்பு என்றால் அது அவர் திரைக்கதையை கொண்டு செல்லும் விதம் தான். அப்படி பார்த்து பார்த்து ஒவ்வொரு காட்சிகளிலும் அவரது மேக்கிங் நம்மை பிரமிக்க வைக்கிறது.

1992 இல் தர்மபுரியில் நடந்த வாச்சாத்தி வன்கொடுமைகளை நம் கண் முன் கொண்டு வந்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். எளிய மக்கள் மீது காவல்துறை நடத்தும் தாக்குதல்களை விசாரணை படத்தின் வெளிப்படுத்திய வெற்றிமாறன் மீண்டும் ஒரு சிறந்த படைப்பை அளித்துள்ளார்.

வழக்கமான வெற்றிமாறன் படங்களில் வரும் காதல், ஆக்ஷன், எமோஷன் என அனைத்தும் இந்த படத்திலும் இடம்பெற்றுள்ளது. அதனுடன் டாக்குமென்ட்ரி போலவே பல்வேறு தகவல்களையும் சின்ன சின்ன விஷயங்களையும் தெளிவாக கொடுத்துள்ளார். 3 ஆண்டுகால உழைப்பு வீன் போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் மிகப்பெரிய பிளஸ். குறிப்பாக காதல் காட்சிகளும், எமோஷனல் காட்சிகளும் வரும் பின்னனி இசை நம்மை கரைய வைக்கிறது. காவல்துறை அதிகாரிகளின் கொடூரங்களை பார்க்க முடியாதவர்கள் கூட இளையராஜாவின் பின்னனி இசையில் கண் கலங்குவார்கள் அந்த அளவிற்கு பின்னணி இசை மிகப்பெரிய பலத்தை சேர்த்துள்ளது.

முதல் பாகத்தின் முடிவில் இரண்டாம் பாகத்திற்கான தொடக்கம் வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் அதிக அரசியலையும், எளிய மக்களின் வலிகளையும் பேசும் என்று எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.