தமிழ்நாடு பெயர் மாற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவை போற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் தியாகியான சங்கரலிங்கனார், ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்று அழைக்கப்பட்ட தமிழர்களின் நிலப்பரப்பை ‘ தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றக்கோரி 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது, கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம், காங்கிரஸ் தலைவர் கக்கன், சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.
ஆனால் சங்கரலிங்கனார் மறுத்துவிட்டார். லட்சியத்துடனும் உறுதியுடனும் இறுதிவரை இருந்தார். தொடர்ந்து 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனாரின் உடல்நிலை 1956-ம் ஆண்டு மிகவும் மோசமான நிலையை எட்டியது. பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அவர் சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் 13.10.1956-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது நினைவை போற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி உண்ணாநிலை இருந்து உயிர் ஈந்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவுநாள் என குறிப்பிட்டுள்ளார். அவரது தியாகத்தைப் போற்றுவோம்! சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்து உறுதி அளித்தபடி தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-இரா.நம்பிராஜன்








