சமீபத்தில் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் ”வேற்றுமைகளை மறந்து இணைந்து முன்னேறுவோம், அது குறித்து விவாதிக்க ஒரு தேநீர் சந்திப்பை நாம் நடத்த வேண்டும்” என்று ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீகார் தலைநகர் பாட்னாவில், ஐக்கிய ஜனதாதள தலைவரும் அம்மாநில முதல்வருமான நிதிஷ் குமார் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, ஆம் ஆத்மி எனப் பல முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில்
கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தின் இடையே ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் சந்திப்பு நடத்தி பேசும்போது, டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிரான தங்களின் நிலைபாட்டுக்கு காங்கிரஸ் ஆதரவு
தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, டெல்லி சர்வீசஸ் ஆர்டினன்ஸ் குறித்த தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாகவும், இரண்டாவதாக, நாடாளுமன்றத்தில் NCCSA மசோதாவை எதிர்க்க வேண்டும் என்று காங்கிரஸை அவர்
வலியுறுத்தியதாகவும். மேலும், கெஜ்ரிவால் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையிலான வேறுபாடுகளைத் தீர்க்க, தனிப்பட்ட முறையிலான ஒரு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, இனி வரும் காலங்களில் வேற்றுமைகளை மறந்து இணைந்து நாம் முன்னேற முயல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக கட்சி வட்டரங்கள் கூறுகின்றன. இருப்பினும் இந்த சந்திப்புக்கு காங்கிரஸ் கட்சி இதுவரை எந்த பதிலும் கூறாமல் இருப்பதனால், இது குறித்தான பேச்சுவார்த்தை இன்னும் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா








