நடிகை மீரா மிதுனை விரைந்து கைது செய்வோம்-நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்

நடிகை மீரா மிதுன் பெங்களூருவில் இருப்பதாகவும், அவரை விரைந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நடிகை மீரா மிதுன் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் பெற்றுள்ள முன்னேற்றம்…

நடிகை மீரா மிதுன் பெங்களூருவில் இருப்பதாகவும், அவரை விரைந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நடிகை மீரா மிதுன் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் பெற்றுள்ள முன்னேற்றம் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் பேசி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார் .இதனால் நடிகை மீரா மிதுன் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்பு அவர்கள் நீதிமன்றத்தில் பின்னர் ஜாமீனில் விடுதலையான இவர்களுக்கு எதிராகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 6 ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீரா மீதுன் ஆஜராகாததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், நீதிமன்ற உத்தரவின்படி மீராமிதுனை வேளச்சேரி மற்றும் சேத்துப்பட்டில் தேடியும் கிடைக்கவில்லை எனவும், அவர் பெங்களூருவில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.