கேரள மாநிலம் கண்ணூர் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியை பதம் பார்த்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே கொட்டியூர் பகுதியில், வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் சமீபகாலமாக மர்ம விலங்குகளால் கடித்து கொல்லப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகளை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இனி இது போன்ற சம்பவங்களில் இருந்து தங்களது செல்ல பிராணிகளை பாதுகாக்கவும், மர்ம விலங்கை பிடிக்க வலியுறுத்தியும் வனத்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து வனத்துறையினர் கேரள மாநிலம் கண்ணூர் அருகே கொட்டியூர் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினர். இந்நிலையில் கொட்டியூர் பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில், ஒரு சிசிடிவி கேமராவில் மட்டும் அப்பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை தொடர்பான காட்சி பதிவாகியிருந்தது. தொடர்ந்து அந்த சிறுத்தை அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிக்களையும் பதம் பார்க்கும் காட்சியும் பதிவாகி இருந்தது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பீதி அடைந்த நிலையில், கேரள வனத்துறையினர் தற்போது சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








