லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த புதிய அப்டேட்டை கொடுத்த விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் தங்களது நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மிஷ்கின், சஞ்சய் தத் இருவரும் வில்லன்களாக நடிப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.
லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் டிரெண்டிங்கில் இருக்கிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.400 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.
முதலில் லியோ படத்தின் இசைவெளியீட்டு விழாவானது செப்டம்பர் மாதத்தில் மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் துபாய் மற்றும் மலேசியாவில் லியோ படத்துக்கான நிகழ்ச்சிகள் பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இங்கிலாந்தில் “லியோ” திரைப்படத்தை அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியிடப்படுகிறது. ரிலீசுக்கு 42 நாட்கள் முன்னதாக டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், 10 ஆயிரத்திற்கும் அதிகமாக டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் -23ஆம் தேதி நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் “இந்த மாதம் லியோ இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதற்கான அனுமதி சீட்டுகளை மாவட்ட நிர்வாகிகளிடம் பெற்றுக் கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார்.







