தெற்காசிய கால்பந்து தொடரில் இந்தியா குவைத் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உட்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் 8 முறை சாம்பியனான இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் வங்கதேசம், பூடான், லெபனான், மாலத்தீவுகள் ஆகிய அணிகள் உள்ளன.
‘ஏ ’ பிரிவில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவும் குவைத் அணியும் மோதின. 45-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. இதனை நன்கு பயன்படுத்திக்கொண்ட கேப்டன் சுனில் சௌத்ரி கோல் அடித்தார்.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இந்தியா அபாரமாக விளையாடியது. ஒரு கட்டத்தில் தடுப்பாட்டத்தில் இந்திய அணி கவனம் செலுத்தியது. கூடுதல் நேரத்தில் இந்திய அணி வீரர் அன்வல் அலியின் தவற்றால் பந்து கோல் போஸ்ட்டுக்குள் சென்றது. இதனையடுத்து போட்டி டிராவில் முடிவடைந்தது. எனினும், இந்தியா மற்றும் குவைத் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.





