70, 80 களில் ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றிய பிரபல திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னத்தின் உடலிற்கு, பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே நெல்லூர்பேட்டையில் ஒரு சாதாரண நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் ஜூடோ கேகே ரத்னம். இவர் சினிமாத்துறை மீது ஏற்பட்ட மோகத்தின் காரணமாக சென்னைக்கு வந்து, தனது சொந்த முயற்சியால் திரைத்துறையில் தனக்கென தனி இடம் பிடித்தார்.1959 ஆம் ஆண்டு தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநராக அறிமுகமானார். 70, 80 களில் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக வலம் வந்த ரஜினி, கமல் போன்றவர்களுடனும் இணைந்து பணியாற்றி, அவர்களுக்கும் சண்டை பயிற்சியை கற்றுக்கொடுத்த இவர் , இதுவரையில் 1500 படங்களுக்கு மேல் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார் . பொதுவாக ரஜினி என்றாலே ஜூடோ ரத்னம்தான் என சொல்லும் அளவுக்கு புகழ்பெற்றவர். இதுவரையில் ரஜினியுடன் 46 படங்களில் அதாவது 1992-ம் ஆண்டு வெளியான பாண்டியன் படம் வரையில் சண்டை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இப்படி தொடங்கிய இவரது திரை வாழ்க்கை இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த தலைநகரம் திரைப்படம் வரை தொடர்ந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட வெவ்வேறு மொழிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும் கலைமாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் 93 வயதான ஜூடோ ரத்னம் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவரது சொந்த ஊரான குடியாத்தத்தில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். அவரது உடலை திரைப்பட பிரபலங்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வடபழனியில் உள்ள தென்னிந்திய ஸ்டண்ட் திரைப்பட டி.வி ஸ்டண்ட் இயக்குனர்கள் மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் யூனியன் அலுவலகத்திற்கு கொண்டு வந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்த ஜூடோ ரத்தினத்திற்கு திரைப்பட சண்டை பயிற்சியாளர்கள் தவசிராஜ், சூப்பர் சுப்புராயன், பவர் பாண்டியன், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட சண்டை பயிற்சியாளர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இவர்களைத் தொடர்ந்து நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சத்யராஜ், மனோபாலா மற்றும் இயக்குனர் எஸ்.பி முத்துராமலிங்கம் உள்ளிட்டோரும் நேரில் வந்து ஜூடோ ரத்தினம் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இத்தைனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சண்டை பயிற்சியாளர்கள் கூறியதாவது; ஜூடோ ரத்னம் திரை உலகில் சண்டை பயிற்சியாளாராக பணியாற்றும் போது அவரை யாரும் அசைக்க முடியாத இடத்தில், மிகப்பெரிய நபராக திகழ்ந்து வந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி கமல் ஆகியோருக்கு சண்டைக் காட்சிகளை அமைத்துக் கொடுத்துள்ளார். புதிததாக சண்டை பயிற்சியாளராக சேர்பவர்களுக்கு முதலில் அதிகமான வாய்ப்புகளை கொடுத்தவரும் ரத்னம் மாஸ்டர் தான். அவர் மற்ற சண்டை பயிற்சியாளர்கள் எல்லோருக்கும் ஒரு அப்பாவாக திகழ்ந்தார். அவர் பணியில் இருக்கும் போது எல்லா சண்டை பயிற்சியாளர்களிடம் அன்போடு பேசுவார்.பிரபல சண்டை பயிற்சியாளரான ரத்னம் மாஸ்டர் இழப்பு திரைப்பட உலகத்திற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்தனர்.
இவர்களை தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினி, ஜூடோ ரத்னம் எனக்கு நீண்ட நாளாக பழக்கமுடையவர். அவர் பழகுவதற்கு மிகவும் மென்மையானவர். திரையுலகில் அவருக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கியவர் என்று கூறினார். பின்னர் பேசிய நடிகர் சத்யராஜ், ஜூடோ ரத்தினம் எனக்கு 40 வருட பழக்கம், சண்டை பயிற்சியாளரிடமும், நடிகர்களிடமும் மென்மையாக நடந்து கொள்ள கூடிய நல்ல மனிதர் என்று தெரிவித்தார்.
ஜூடோ ரத்னம் குறித்து பேசிய நடிகர் மனோபாலாவும், சண்டை பயிற்சியாளரிடமும், நடிகர்களிடமும் ஒரு குழந்தை போல் மென்மையாக நடந்து கொள்வார். எல்லா நேரமும் தூக்கம் இல்லாமல் சூறாவளியாக சுழன்று வேலை செய்வார். அவர் சொந்த ஊரான குடியாத்த பகுதிகளுக்கு அதிகமான உதவிகளை செய்துள்ளார் என்று கூறியிருந்தார்.
தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு ஜூடோ ரத்னத்தின் உடல் மீண்டும் இன்று காலை 10.0 மணிக்கு சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான குடியாத்தம் செல்லப்படுவதாக இருந்தது. ஆனால் தற்போது பிரபலங்கள் ஏராளமானோர் தொடர்ந்து வந்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருப்பதால் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு அவரது உடல் இன்று மாலை 3.00 மணிக்கு மேல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான குடியாத்தம் கொண்டு செல்லப்பட்டு, நாளை மாலை 3.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா











