பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்திய அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்தையும் வழி நடத்துவது அரசியலமைப்புச் சட்டம் தான். அண்ணல் அம்பேத்கரால் வகுக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய அரசியல் சட்ட அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் 77-ஆம் ஆண்டு இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமைகளையும், பாதுகாப்பையும் ஒவ்வொரு குடிமகனும் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தகைய வழிகாட்டி ஆவணத்தை வழங்கியதற்காக அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான குழுவினருக்கும், அதை நிறைவேற்றிய அரசியல் சட்ட நிர்ணய அவைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், மக்களுக்கு பாதுகாப்பதற்காக அதில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளும், சமூக ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களை முன்னேற்றுவதற்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி உரிமைகளும் தான். ஆனால், அந்த இரு உரிமைகளும் மக்களுக்கு இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டதற்கு மாறாக நீதிமன்றங்களால் திணிக்கப்பட்ட கிரீமிலேயர், 50% இட ஒதுக்கீட்டு உச்சவரம்பு போன்றவை தான் அதற்கு தடையாக இருக்கின்றன.அந்தத் தடைகள் அகற்றப்பட வேண்டும்.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர், 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பு ஆகியவற்றை நீக்கவும், தனியார் துறை, உயர்நீதித்துறையில் இட ஒதுக்கீடு வழங்கவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்காக அறவழியிலும், அரசியல் வழியிலும் உழைப்பதற்கு இந்த நாளில் உறுதியேற்போம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




