நொடிக்கு ஒரு போராட்டம் என்ற நிலைமையில் உள்ளது லெபனான். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
இந்நிலையில் அந்நாட்டின் முக்கிய நகரமான திரிப்போலியின் வடக்கு பகுதியில் அடிப்படைத் தேவைகளுக்காகப் பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 10 பேர் உட்பட போராட்டக்காரர்கள் பலரும் படுகாயம் அடைந்தனர்.
தொடரும் உள்நாட்டு போர்
முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் பகுதியில் ஆறு வருடங்களாகச் சேமித்து வைக்கப்பட்ட 2,750 அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 70 பேர் உயிரிழந்தனர், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் சுக்குநூறானது.
இதனையடுத்து மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக லெபனான் நாட்டில் பிரதமர் உட்பட மொத்த அமைச்சரவையும் கூண்டோடு ராஜினாமா செய்தது. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அந்நாட்டில் நிலையான அரசு அமையாமல் உள்ளது.

லெபனானில் கடந்த 1975-ம் ஆண்டு முதல் அந்நாட்டில் இதுவரை 90 உள்நாட்டு போர்கள் நடைபெற்றுள்ளது. மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்நாட்டில் நிலவும் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மற்றும் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை ஆகியவை லெபனானின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம்.
நாட்டின் முக்கால்வாசி கடற்கரை பகுதிகள், தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டது முக்கிய விமர்சனமாகப் பார்க்கிறார்கள்.
நிதியுதவியை நிறுத்திய ஐஎம்எப்
இந்நிலையில்தான் கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி நிலவுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. லெபனானின் உள்நாட்டு உற்பத்தியும் கடந்த ஆண்டு இருந்த 20.3 சதவீதத்திலிருந்து தற்போது 9.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மிகச் சிறிய நாடான லெபனானில் அறுபது லட்சம் பேர் உள்ளனர். அவர்களில் பத்து லட்சம் பேர் சிரியா நாட்டு அகதிகள். இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக சரிபாதியான மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை பத்தாயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். ஒரு நாளைக்கு 20 மணிநேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுகிறது.
இந்நிலையில் அத்தியாவசிய தேவையான உணவு, பெட்ரோல், டீசல், மருத்துவம், மருந்துகள் உள்ளிட்டவை கிடைப்பதில் பற்றாக்குறை நிலவுகிறது. தற்போது லெபனானில் நடைபெறும் போராட்டங்கள் இதுபோன்ற அத்தியாவசிய தேவைகளுக்காகத்தான்.

அதேபோல் லெபனான் பணத்தின் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாததைவிடக் கடந்த சனிக்கிழமை கடுமையான சரிவைச் சந்தித்தது. அமெரிக்காவின் 11 டாலர் லெபனானின் 18 ஆயிரம் பவுண்ட்-க்கு நிகராக சரிந்துள்ளது.
லெபனான் மீட்க முடியாத பொருளாதார நெருக்கடிக்குச் சென்றுள்ள நிலையில் அந்நாட்டுக்கான நிதியைச் சர்வதேச நாணய நிதியம் நிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை லெபனானுக்கு உலக நாடுகளின் உதவிகள் கிடைப்பதில் தடையை ஏற்படுத்தியுள்ளது.
மதங்கள் கடந்த மக்களுக்கான ஆட்சி
மதச்சார்பற்ற அரசியலமைப்பு சட்டத்தைக் கொண்டுள்ள லெபனானில், அதிபர் பதவிக்கு மெரூனைட் கிறித்துவ சமூகப் பிரதிநிதிக்கும், பிரதமர் பதவிக்கு சன்னி முஸ்லிம்கள் பிரிவுக்கும், நாடாளுமன்ற சபாநாயகர் பதவி ஷியா முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவே அந்நாட்டின் பிரிவினைவாதத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஒவ்வொரு மத பிரிவுக்கும் பல உட்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இஸ்லாமில் 4 பிரிவுகளும், கிறிஸ்துவ பிரிவுகளில் 12 உருவாக்கப்பட்டுள்ளன. இதுதான் அந்நாட்டின் முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

பிரதமர், அதிபர்,சபாநாயகர், மற்றும் நீதிபதி என எல்லோரும் வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் முரண்பட்டகருத்துடன் செயல்படுவது சாத்தியமில்லா விஷயமாக உள்ளது. இந்த மத ரீதியிலான மோதல்களுக்கு பின்னணியில் வல்லரசு நாடுகளின் கைகள் இருப்பது கவனிக்கப்படவேண்டிய விஷயமாகும். அமெரிக்கா, சவுதி ஆதரவளிக்கும் சன்னி ஆட்சியா அல்லது ஈரான், சிரியா ஆதரிக்கும் ஷியா ஆட்சியா என்ற அதிகார மோதலும் லெபனானின் நாட்டின் சீரழிவுக்கு முக்கியமான விஷயம்.
இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் உள்ள லெபனானில் மதங்கள் கடந்த ஆட்சி மலர்ந்திட மக்களுடைய ஒற்றுமையே இப்போதைய தேவை.







