கங்கை நதியில் சடலம் மிதப்பது கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிக பாதிப்புகளை கடந்த மாதம் ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. அப்போது, சடலங்களை எரிக்க போதுமான இடம், விறகு கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதில், உச்ச பட்ச கொடுமையாக உத்தரப் பிரதேசத்தில் ஓடும் கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் வீசப்பட்டன.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தது. அதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது “இந்த விவகாரம் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய தீவிரமான பிரச்சனை” என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பான விவரங்களை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் வழங்குமாறு மனுதாரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினர்.







