காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலை நடுநிலையாக நடத்த தலைமை விரும்புகிறது என சசிதரூர் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவியல் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இருவரில் யார் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என்பது 17-ம் தேதி தேர்தல் முடிந்ததும் தெரிந்துவிடும்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், அம்பேத்கர் தனது சீடர்களுடன் பவுத்த மதத்தை தழுவிய தீக்சபூமி நினைவு சின்னத்துக்கு சசிதரூர் சென்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தான் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசியதாக கூறினார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இல்லை எனவும், அப்படி தாங்கள் வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதனை மீண்டும் மீண்டும் கூறினார்கள் என்றார். இதன்மூலம் அவர்கள் (சோனியாகாந்தி) நேர்மையான தேர்தலை விரும்புவதாக சசிதரூர் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலை பொறுத்தமட்டில் முறைப்படி தேர்தல் நடத்தி தலைவரை தேர்வு செய்து கட்சியை பலப்படுத்த விரும்புகிறார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை. சோனியா காந்தி உள்ளிட்டவரின் ஆதரவு என்பது மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தானே உள்ளது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய சசிதரூர், இது ஒரு கட்சியில் உள்ள இருவருக்கு இடையேயான தேர்தல். இதில் பகை, போர் என எதுவும் இல்லை. மாறாக நட்புரீதியானது. நாங்கள் எங்கள் திட்டங்களை முன்வைத்து கட்சியினரிடம் ஆதரவு கோருகிறோம் என்றார்.
-இரா.நம்பிராஜன்








