லாரன்ஸ் – வடிவேலு கூட்டணியில் சந்திரமுகி-2

90களில் தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத வசூல் சக்கரவர்த்தியாக வலம்வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாபா படத்தின் மூலமாக தன்னுடைய 20ம் நூற்றாண்டின் வெற்றிக்கணக்கை தொடங்க நினைத்தார். ஆனால், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய…

90களில் தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத வசூல் சக்கரவர்த்தியாக வலம்வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாபா படத்தின் மூலமாக தன்னுடைய 20ம் நூற்றாண்டின் வெற்றிக்கணக்கை தொடங்க நினைத்தார். ஆனால், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய அடியை கொடுத்தது பாபா. அப்படத்தின் தோல்வியால் தயாரிப்பாளர்களே தன்னை பார்த்து ஜெர்க் ஆனார்கள் என்று ரஜினியே கூட குறிப்பிட்டிருப்பார். இந்நிலையில் ‘நான் யானை இல்ல குதிரை’ என்று சொல்லி அடுத்த வீறுகொண்டு எழுந்த ரஜினிகாந்த் சந்திரமுகியின் மூலமாக சரித்திர வெற்றியை அடைந்தார். தமிழ் சினிமாவில் இன்று வரை திரையரங்கில் அதிக நாட்கள் ஓடிய படம் சந்திரமுகி.

இந்தப் படம் கன்னட படமான அப்தமித்ராவின் ரீமேக் ஆகும். அந்த அப்தமித்ரா, மலையாளப் படமான மணிசித்ரதாழுவில் இருந்து ரீமேக் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சந்திரமுகி படத்தின் தொடர்ச்சியாக(sequel) அதன் இரண்டாம் பாகம் எடுப்படும் என்றும் அதிலும் ரஜினிகாந்தே நடிப்பார் என்றும் நீண்டநாட்களாக எதிர்ப்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பே ராகவா லாரன்ஸ் நடிப்பில் இப்படம் எடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் லைக்கா நிறுவனம் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி -2 எடுக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதைவிட சுவாரஸியமான தகவல் என்னவென்றால் சந்திரமுகியில் முருகேசனாக நடித்து காமெடியில் பட்டையை கிளப்பிய வைகைப்புயல் வடிவேலுவும் இப்படத்தில் நடிக்கிறார் என்பதுதான். சந்திரமுகி கதையின் தொடர்ச்சியாகவே இப்படம் அமையுமா அல்லது தனி கதையாக முன்னெடுப்பார்களா என்பது பற்றிய தகவல் இன்னும் உறுதியாகாத நிலையில் லாரன்ஸ் படத்தில் இடம்பெற்றிருப்பதால் அவருடைய ஸ்டைலில் தனிக்கதையாகவே இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது. மேலும் சந்திரமுகி போல பேய் இல்லாத பேய் படமாக இருக்குமா அல்லது ராகவா லாரன்ஸின் பேய் படங்கள் போல், பேய் உள்ள பேய் படமாக இருக்குமா என்ற கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இரண்டும் கலந்த கலவையாக சந்திரகாஞ்சனாமுகியாக இப்படம் இருக்கப்போகிறது எனவும் இணையத்தில் சிலர் கிண்டலடித்து வருகின்றனர்.

ஏற்கனவே பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் , வடிவேலு நடிப்பில் சிவலிங்கா எனும் பேய் படம் வெளியானது குறிப்பிடப்பட்டது. இந்த படமும் கன்னடத்தில் பி.வாசு இயக்கிய சிவலிங்கா படத்தில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டது. இருந்தும் கன்னட படம் அளவிற்கு தமிழ் சிவலிங்கா ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில் அதே பி.வாசு, லாரன்ஸ், வடிவேலு கூட்டணியில் உருவாக உள்ள சந்திரமுகி 2 குறித்த எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது. சந்திரமுகி படத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது வித்தியாசாகரின் இசைதான். இந்நிலையில் சந்திரமுகி 2-ல் அவர் இடம் பெறாதது ஆடியன்ஸுக்கு ஏமாற்றத்தை தந்தாலும் பாகுபலி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கீரவானி இப்படத்திற்கு இசையமைத்திருப்பதால் எதிர்ப்பார்ப்பையும் கூட்டியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.