குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை: சரத் பவார்

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் பதவிக்கான…

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்காக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூட்டிய இந்த கூட்டத்தில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, சிபிஐ, சிபிஎம் உள்பட 17 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ தலைவர் பினோய் விஸ்வம், அனைத்து எதிர்க்கட்சிகளும் சரத் பவாரை முன்மொழிந்ததாகவும் எனினும், தனது உடல்நிலையை காரணம் காட்டி இந்த முடிவை ஏற்க அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். எனினும், தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தாங்கள் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் தனது பெயரை பரிந்துரைத்ததை பாராட்டுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சரத் பவார் பதிவிட்டுள்ளார். எனினும் இதனை தான் பணிவுடன் ஏற்க மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் நலன்களுக்காக பணியாற்றி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.