திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கு! உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வந்த குரோம் லெதர் ஃபேக்டரி என்ற…

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வந்த குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை 1982ல், நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு எடுத்தது.

இந்நிலையில் அரக்கோணம் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகன், கடந்த 1995-ம் ஆண்டு குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தின் பங்குகளை தனது அதிகாரத்தின் மூலம் முறைகேடாக வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே போல 170 ஏக்கர் நிலத்தையும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்போடு போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரிப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அந்த நிலத்தில் வீட்டுமனைகளுக்கான லேஅவுட்களையும் போட்டு சுமார் 1700 கோடிகளுக்கு தற்போது வரை விற்பனை செய்வதாகவும் புகார் கூறப்படுகிறது.

இது தொடர்பாக “டாவ்சான்” என்பவர் அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையில் இருந்தனர். இந்நிலையில் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய  கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்யக்கோரி, ஜெகத்ரட்சகன் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு அவர் மீதான இரு வழக்குகளையும் கடந்த நவம்பர் 2022ல் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டாவ்சான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் ஜெகத்ரட்சகன் மீதான மிகப்பெரும் குற்றச்சாட்டு மற்றும் ஆவண ஆதாரங்கள் இருந்தும் அதனை உயரநீதிமன்ற கருத்தில் கொள்ள தவறிவிட்டது. அதேபோல் ஒரு பெரும் தொகை பணம் ஈட்டப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தியதையும் உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் வழக்கை ரத்து செய்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஒரு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.