சொந்த ஊரில் மாரிமுத்துவின் இறுதிச்சடங்கு: நாளை நடைபெறும் என அறிவிப்பு!

மாரடைப்பால் மரணம் அடைந்த இயக்குநர், நடிகர் மாரிமுத்துவின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்தில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான்…

மாரடைப்பால் மரணம் அடைந்த இயக்குநர், நடிகர் மாரிமுத்துவின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்தில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் படங்களில் பணிபுரிந்த மாரிமுத்து, பின்னர் இயக்குநர் எஸ்.ஜெ. சூர்யாவின் வாலி திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ‘கண்ணும் கண்ணும்’ 2014-ஆம் ஆண்டு ‘புலிவால்’ உள்ளிட்ட 2 படங்களை இயக்கியுள்ளார்

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம்’ செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாரிமுத்து, தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இவர் பரியேறும் பெருமாள், ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். வில்லன் வர்மாவின் வலதுகரமாக அந்த படத்தில் அவர் நடித்திருந்தார். இது மட்டுமல்லாமல் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பெரும் புகழை பெற்றுக் கொடுத்தது.

இந்நிலையில் தான் நடித்து வந்த எதிர்நீச்சல் சீரியலுக்காக இன்று காலை சென்னையில் டப்பிங் பேசி வந்தார் மாரிமுத்து. அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டப்பிங்கை பாதியில் நிறுத்திவிட்டு, அவரே காரை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

மாரிமுத்துவிற்கு பாக்யலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். மாரிமுத்துவின் உடல் சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் பிறகு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை (செப்.,9) இறுதிச்சடங்கு நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.