லகீம்பூர் வன்முறை விவகாரத்தில் மத்திய இணை அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 விவசாயிகள் பலியாயினர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் பாஜகவினர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தச் சம்பவத்தின் போது இணை அமைச்சர் மகன் ஆசிஷ் மிஸ்ரா அந்த இடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த சனிக்கிழமை சிறப்பு புலனாய்வு குழு முன்பு ஆஜரான ஆசிஷ் மிஸ்ரா, கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இதற்கிடையே, இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடத்தக் கோரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி அந்த கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி குழுவினர் குடியரசு தலைவரை இன்று காலை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். ராகுல் காந்தியுடன் மல்லிகாஜூர்ன கார்கே, பிரியங்கா காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் உடன் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள் ளவரின் தந்தை (அஜய் மிஸ்ரா) மத்திய இணை அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில் நியாயமான விசாரணைக்கு சாத்தியமில்லை என்பதால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினோம். அதோடு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம் என்றார்.