கோயிலை இடிக்க முயன்ற கூலி தொழிலாளி மீது கோவில் சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இ.எஸ்.ஐ காலனி தெருவில் வசித்து வருபவர் 35 வயதான குருசாமி. இவர், தனியார் மில்லில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மீனா என்கிற மனைவியும் இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் ஒரு வீடும் அதைச் சார்ந்து தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வந்த அம்மன் கோவிலும் உள்ளது. இறந்த குருசாமி கொரோனா காலகட்டத்தில் சரிவர வேலை இல்லாத காரணத்தினால் அதிக கடன் வாங்கியதாக அப்பகுதி மக்களிடையே கூறப்பட்டு வருகிறது.
மேலும் கடந்த சில மாதங்களாக மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் மது அருந்தி கொண்டே இருந்துள்ளார். இதனால் அவரது மனைவி மீனாவிற்கும் குருசாமிக்கும் இடையே சண்டை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவரது மனைவி ஐந்து மாதங்களுக்கு முன்பு கணவர் குருசாமி உடன் சண்டையிட்டு அவரது தந்தை ஊருக்கு தனது குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.

இதனால் மனமடைந்த நிலையில் இருந்த குருசாமி அவ்வப்போது தனது குழந்தைகளுடன் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். குழந்தைகள் அப்பா அம்மாவுடன் சேர்ந்து வசிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதனால் வீடு மற்றும் கோவிலை விற்றுவிட்டு வாங்கிய கடன்களை அடைத்து விட்டு மனைவியின் ஊரான கழுகுமலைக்கு சென்று விட குருசாமி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
வீட்டையும் கோயில் நிலத்தையும் சேர்த்து விற்க ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் இடத்தை வாங்க வந்த நபர்கள் கோவில் அருகே இருப்பதனை கண்டு சற்று தயக்கம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது. இதன் காரணமாக குருசாமி கோவிலை இடித்து இடத்தினை சமப்படுத்தி பின்பு அதனை விற்கும் நோக்கத்தில் நேற்று பூஜைகள் செய்து கோவிலில் உள்ள சாமி சிலைகளை அகற்றி உள்ளார்.
அதன்படி இன்று கோவில் சுவர்களை இடிக்கும் வேளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக கோவில் கட்டிட சுவர் இடிந்து விழுந்தது. இடுப்பாட்டில் சிக்கிய குருசாமி சம்பவ இடத்திலேயே மூச்சுதிணறி உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் குருசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







