தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் புதிதாக 476 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சமீபகாலமாக கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு 3.34 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மனிதகுலம் என்றும் மறக்கமுடியாத அளவிற்கு கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் உலகெங்கிலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் மீண்டும் வேகமெடுத்து வருகிறது கொரோனா பரவல். கடந்த மே 1ந்தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 41தான். ஆனால் இன்று அந்த எண்ணிக்கை 476ஆக அதிகரித்துள்ளது. ஒன்றரை மாதங்களில் கிட்டத்தட்ட 11 மடங்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 14,212 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 476 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 0.5% கீழாக குறைந்திருந்த தினசரி கொரோனா பாதிப்பு சதவீதம் தற்போது 3.34% ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,58,445ஆக அதிகரித்துள்ளது.
இன்று தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 221 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 95 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 26ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழப்புகள் கடந்த சில மாதங்களாக தவிர்க்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். தமிழ்நாட்டில் மீண்டும் வேகமாக கொரோனா அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் விழிப்போம் தடுப்போம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.







