காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்று நாங்குநேரி தொகுதி காங்கிரஸார் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காட்டில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த கலவரத்தின் போது காயம் அடைந்த களக்காட்டை சேர்ந்த யோசுவா நியுஸ்-7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி அளித்தார். மாவட்ட தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றதாகவும், அப்போது கே.எஸ் அழகிரி தங்களை தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தொண்டர்களை தாக்கும் மாநில தலைவரை காங்கிரஸ் மேலிடம் நீக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.
பாளையங்கோட்டை கனகராஜ் என்பவர் கூறுகையில், தாக்குதல் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு காங்கிரஸ் மேலிடம் தொண்டர்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்றும், நடந்தது குறித்து மாநில தலைவர் அழகிரி, தொண்டர்களிடம் விளக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.







