டாம் குரூஸ் வைத்து எடுக்க வேண்டிய படத்தை தன்னை வைத்து எடுத்து விட்டதாக நடிகர் சந்தானம் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர் சந்தானம், புகழ், இயக்குனர் மனோஜ் பீதா, ஆதிரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் சந்தானம், என் படம் என்றாலே காமெடி படம் என்று தான் எதிர்ப்பார்க்கிறார்கள். அதை மாற்றியமைப்பது கடினமான வேலை. அதை தான் இயக்குனர் ரத்னகுமாரும் சொன்னார். ஆனால், இப்படத்தில் என்னை காமெடியே செய்ய விடவில்லை.
நாங்கள் ஒத்திகை செய்யும் போது அதை படம் பிடித்து விடுவார். நடிக்கும் போது அதை வேண்டாம் என சொல்லிவிடுவார். மனோஜுடன் வேலை பார்த்தது புதிய அனுபவம் எனக் கூறினார்.யுவன் சங்கர் ராஜாவுக்கு மிக்க நன்றி அவரின் இசை பலப்படங்களை தூக்கி நிறுத்தியுள்ளது பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது எனப் பேசினார்.
தொடர்ந்து புகழ்-சந்தானம் நடிப்பதால் படம் பயங்கர காமெடியாக இருக்கும் என்று எதிர்பார்த்து வராமல் ஒரு கமர்சியல் படத்திற்கு வருவதாக வந்து படத்தை பாருங்கள். காமெடி என்று பார்க்காமல் இது ஒரு படம் என்று பார்த்தால் சிறப்பாக இருக்கும். இது ஒரு புது முயற்சி தான். ரீமேக் படம் எடுப்பது ரொம்ப சவாலான விஷயம். மார்வெல் ஸ்டுடியோ படமாக இருந்தாலும் அதை தமிழில் டப்பிங் செய்து விடுகின்றனர். தெலுங்கு படம் பார்த்தவர்களுக்கும் பார்க்காதவர்களுக்கும் இந்த படம் வித்தியாசமாக தான் இருக்கும். ஒரே படம் தான் ஆனால் 1 வருடமாக அதை எடிட் செய்து கொண்டு இருந்தார்.
புகழ் உடன் சபாபதி திரைப்படத்தில் சரியான காமெடி அமையவில்லை, என்பது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. குதிரை சவாரி எல்லாம் என்னை செய்ய சொன்னார் இயக்குனர். டாம் குரூஸ் வைத்து எடுக்க வேண்டிய படத்தை என்னை வைத்து எடுத்து விட்டார். என்னை வேறு மாதிரி காட்ட நினைக்கும் புதிய இயக்குனர்களுடன் வேலை செய்வது சிறப்பாக உள்ளது. இங்கிருந்து படம் எடுத்து அதை பான் இந்தியா படமாக கூட மாற்றலாம். மக்கள் முன்பிருந்தே புத்திசாலியாக தான் உள்ளனர். நல்ல படமாக இருந்தால் நிச்சயம் வரவேற்பு கிடைக்கும் எனப் பேசினார்.
அதோடு விமர்சனம் என்பது நாம் எடுத்து கொள்வதை பொறுத்து தான் உள்ளது. நமக்கு பிடித்ததை நன்றாக செய்தால் விமர்சனம் பற்றி எதிர்ப்பார்க்க தேவையில்லை. இருப்பதிலேயே கஷ்டமான விஷயம் படம் தயாரிப்பது தான். தற்போது என்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு லீவ் கொடுத்து உள்ளேன். இந்த படத்திற்கு பிறகு என்னுடைய படங்கள் எல்லாம் காமெடி படங்களாக தான் இருக்கும். 4 அல்லது 5 படங்களுக்கு பிறகு தான் இது மாதிரி சீரியஸ் படங்களில் நடிப்பேன் எனக் கூறினார். மேலும் அடுத்து அடுத்து வரும் படங்கள் என்னுடைய ஜானர் படங்களாக நடிக்க உள்ளேன்.அதோடு இயக்குனர் சொல்வதை கேட்டு தான் படம் பண்ணுவேன் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து வாரிசு படம் தெலுங்கில் வெளியிடுவதில் உள்ள பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளித்த சந்தானம், நம்முடைய தாய் மொழிக்கு நாம் முன்னுரிமை கொடுப்பது போல் தான் தெலுங்கில் அவர்களது மொழிக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். அதில் என்ன உள்ளது என கேள்வியெழுப்பினார். வாரிசு படம் தொடர்பாக அவர்கள் பேசி முடிவு செய்து கொள்வார்கள். தயாரிப்பாளர் சங்கம் இது குறித்து பேசி நல்ல முடிவை எடுத்துகொள்வார்கள். நாம் தமிழ் படத்திற்கு இங்கு முன்னுரை கொடுப்போம், இங்கு விஜய் படம் வெளியாகும் போது அதற்கு ஆதரவு கொடுப்போம், அதற்கு முன்னுரிமை கொடுப்போம் எனப் பேசினார்.










