காசி தமிழ் சங்கமம் விழா தொடக்க நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா தனது குழுவினருடன் இணைந்த பாடல் பாடினார்.
தமிழகத்திற்கும், உத்தரப்பிரதேசத்திற்கும் குறிப்பாகக் காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. இதற்காக வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற பெயரில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் மாதம் 19ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து வந்திருந்தார். இந்நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இளையராஜா, மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இசையமைப்பாளரும், எம்பியுமான இளையாராஜா இசைக் கச்சேரி நடைபெற்றது. இதில், நான் கடவுள் திரைப்படத்தில் இடம்பெற்ற சம்போ…. சிவசம்போ என தொடங்கும் பாடலை இளையராஜா தனது குழுவினருடன் சேர்ந்து பாடினார். இளையராஜாவின் இசைக்கச்சேரியை பிரதமர் நரேந்திர மோடி மெய்மறந்து ரசித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா எம்.பி., காசி நகருக்கும், தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பெருமைமிகு இந்த காசி நகரிலே, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி தோன்றியது என்பதை பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன். நதிநீர் இணைப்பு திட்டத்தை அன்றே பாடினார் பாரதியார். தமிழ்மொழி பழமையான, பெருமைமிக்க மொழி. காசியை போலவே தமிழ்நாடும் பழமையான வரலாறு உடையது என்று கூறினார்.