பார்த்தா சாட்டர்ஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நீதிமன்றக் காவல் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் வர்த்தகம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் ஆகிய துறைகளுக்கான அமைச்சராக…

மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நீதிமன்றக் காவல் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் வர்த்தகம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் ஆகிய துறைகளுக்கான அமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர், 2016 முதல் 2021 வரை அம்மாநில உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகவும் இருந்தார்.

அப்போது, அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து, அது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அமைச்சர்கள் பார்த்தா சாட்டர்ஜி, பரேஷ் அதிகாரி உள்பட பல அமைச்சர்களின் வீடுகளிலும், பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமான அர்பிதா முகர்ஜியின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில், அர்பிதா முகர்ஜியின் வீடுகளில் இருந்து மிகப் பெரிய குவியலாக சுமார் ரூ. 50 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. அதோடு, வெளிநாட்டு கரன்சி, நகைகள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, பார்த்தா சாட்டர்ஜியும் அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, இருவரும் கொல்கத்தாவில் உள்ள பணமோசடி தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பார்த்தா சாட்டர்ஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த ஊழலுக்கும் பார்த்தா சாட்டர்ஜிக்கும் தொடர்பு இல்லை என்றும் எனவே, அவரை விடுவிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

அர்பிதா முகர்ஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிகபட்சம் 5 பேர் தங்கக்கூடிய சிறை அறையில் அர்பிதாவை அடைக்குமாறு கோரிக்கை வைத்தார்.

இருவரையும் விடுவிக்க அமலாக்கத்துறை தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து, இருவரின் நீதிமன்றக் காவல் வரும் 31ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.