தேசிய விளையாட்டான ஹாக்கியில் தமிழ்நாட்டின் தலைநகரமாக கோவில்பட்டி விளங்குகிறது. கோவில்பட்டிக்கும் ஹாக்கிக்கும் இடையேயான தொடர்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…..
தமிழ்நாட்டில் ஹாக்கி என்று சொன்னவுடன் முதலில் நினைவுக்கு வரும் ஊர், கோவில்பட்டி. இந்த ஊர், விளையாட்டுத்துறையில் தென் தமிழகத்திற்கு தொடர்ந்து பல பெருமைகளை சேர்த்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோவில்பட்டிக்கும் ஹாக்கி விளையாட்டுக்குமான தொடர்பு 100 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. ஹாக்கியின் ஜாம்பவான் என அழைக்கப்படும் மேஜர் தயான் சந்த், 1952-ம் ஆண்டு கோவில்பட்டியில் நடைபெற்ற கோடைகால சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்றார். வ.உ.சி. அரசு பள்ளி மைதானத்தில் வீரர்களுக்கு அவர் பயிற்சியும் வழங்கினார். இந்த நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே இன்றும் பசுமை மாறாத நினைவாக இருந்து வருகிறது.
மேஜர் தயான் சந்த்தை கோவில்பட்டிக்கு அழைத்து வந்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க மருத்துவர் துரைராஜ் என்பவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார். இவரை கோவில்பட்டி மக்கள் ”ஹாக்கி விளையாட்டின் தந்தை” என அழைக்கின்றனர். கோவில்பட்டி வீரர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விளையாட பல உதவிகளை இவர் செய்துள்ளார். இவரை போன்ற பலர், கோவில்பட்டி இளைஞர்களிடையே ஹாக்கியை கொண்டு செல்ல பெரும் முயற்சி எடுத்துள்ளனர்.
மறுபுறம், கோவில்பட்டியை சேர்ந்த பல ஹாக்கி அணிகள், மலேசியா, இலங்கை, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை அள்ளி வந்துள்ளன. குறிப்பாக, ”இலக்குமி ஆலை” என்ற ஹாக்கி அணி கோவில்பட்டியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தகைய அணிகளின் சாதனை, ஹாக்கியில் தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கோவில்பட்டி இளைஞர்களின் மனதில் விதைத்துள்ளன.
கோவில்பட்டியில் உள்ள ஹாக்கி மைதானம் 2017-ம் ஆண்டு 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அதன் தரம் சர்வதேச அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில், கோவில்பட்டியில் மட்டும் அண்மையில் 2 முறை தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி நடத்தப்பட்டது. அந்த போட்டிகளின்போது கோவில்பட்டியில் இருந்து மட்டும் 9 வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வாகியிருந்தனர்.
அதேபோல், இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியகோப்பை ஹாக்கி தொடரில், கோவில்பட்டியை சேர்ந்த வீரர் மாரீஸ்வரனும், கோயில்பட்டியில் பயிற்சி பெற்ற வீரர் கார்த்திக்கும் இந்திய அணியில் இடம்பிடித்தனர். அந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர்கள் இருவரும், தற்போது, இந்திய சீனியர் ஹாக்கி அணியில் விளையாடி வருகின்றனர்.
இவர்களை போன்ற பலர், தங்களது திறமையால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பணிகளையும் பெற்றுள்ளனர். இப்படி கோவில்பட்டியும், ஹாக்கி விளையாட்டும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளன. அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் படிப்புக்கு இணையாக, ஹாக்கி விளையாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். இதனால், மேஜர் தயான் சந்த் பயிற்சி அளித்த கோவில்பட்டி மண்ணில் இருந்து, எதிர்காலத்தில் பல நூறு தயான் சந்த்துகள் உருவாவார்கள் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்…
-மோகன், கோவில்பட்டியில்