கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017 அன்று செக்யூரிட்டி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். அந்த பங்களாவில் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்த சயான், மனோஜ், மனோஜ்சாமி, ஜித்தின்ராய், திபு, சதீசன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டர்.
வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், சாலை விபத்தில் உயிரிழந்தார். அந்த எஸ்டேட்டில் பணிபுரிந்த தினேஷ் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த வழக்கு கோத்தகிரி நீதிமன்றத்தில் இருந்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சயான், மனோஜ் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் தொடர்புடைய சயான் விசாரணைக்கு ஆஜரான நிலையில், அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தரப்பில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதால் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.








