மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு வழங்கிய விரிவான திட்ட அறிக்கையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்துள்ளது.
கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற பசவராஜ் பொம்மை, டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பிற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை யும் சேர்ப்பதாக மத்திய அமைச்சர் ஷெகாவத் உறுதியளித்ததாகக் கூறினார்.
இந்நிலையில், மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ரத்து செய்ய, மத்திய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.
மேலும், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு மேற்கொண்டு ஏதாவது அறிக்கையை சமர்ப்பித்தால் அதனை பரிசீலிக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு உத்தரவுகளை பிறப்பிக்குமாறும் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.







