இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகி இருப்பதை அடுத்து, சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், 3-0 என்ற கணக்கில் டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் விராத் கோலி விளையாடவில்லை என்பதால் ரஹானே கேப்டனாக செயல்பட இருக்கிறார். காயம் காரணமாக, தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே ரோகித் சர்மா, விராத் கோலி இல்லாமல் களமிறங்கும் இந்திய அணிக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கே.எல்.ராகுல் விலகியுள்ளதை அடுத்து, அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரராக சுப்மன் கில் களமிறங்குவார் என்று தெரிகிறது. மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகியோரில் ஒருவர் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகலாம் என்று கூறப்படுகிறது.








