‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ்…. தமிழ் சினிமாவின் அற்புத கலைஞன்…!

இயக்குநர் பாக்யராஜ் ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 73. அவரைப்பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

திரைக்கதை மன்னன் என்று திரையுலகினரால் போற்றப்படும் கே.பாக்யராஜ் 1951 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 – ஆம் தேதி பிறந்தவர். இவரது தந்தை பெயர் கிருஷ்ணசாமி, தாயார் அமராவதி அம்மாள்.

உதவி இயக்குநராக….

இயக்குனர் பாரதிராஜா இயக்கிய முதல் திரைப்படமான பதினாறு வயதினிலேவில் உதவி இயக்குநராக யாளராக பணியாற்றினார். பாக்யராஜ். பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றினார்

நடிப்பும் இயக்கமும்

தொடர்ந்து தனது நான்காவது படமான ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் பாக்கியராஜை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் பாரதிராஜா. அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது

கதாநாயகனாக வெற்றி பெற்ற பாக்கியராஜ், சுதாகர், சுமதி நடித்த ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மேலும் அப்படத்தில் ஒரு குணச்சித்திரப் பாத்திரத்திலும் நடித்திருந்தார். ‘கன்னிப்பருவத்திலே’ படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி அப்படத்தில் வில்லன் வேடத்திலும் நடித்த இவர், ஒரு கை ஓசை’ என்கிற படத்தின் மூலம் தயரிப்பாளராகவும் உயர்ந்தார்.

அடுத்து இவர் இயக்கிய ‘மௌன கீதங்கள்’ ‘இன்று போய் நாளை வா’, படங்கள், மாபெரும் வெற்றி பெற்றன. மேலும் இவரின் விடியும் வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு பேச்சு, டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு என இவரது படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

இசையமைப்பாளராக…..

இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புது அவதாரம் எடுத்த இவர் அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தார். பாக்கியராஜ் தனது குருனாதர் பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றிய படம் ‘ஒரு கைதியின் டைரி’ கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த அந்தப் படம் மிகச் சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது.

பிற மொழிகளில்….

ஒரு கைதியின் டைரி திரைப்படத்தின் இந்திப் பதிப்பில் அமிதாப் பச்சன் கதானாயகனாக நடிக்க அப்படத்தை இயக்குகின்ற பொறுப்பை பாக்யராஜ் ஏற்றார். ஆக்ரி ராஸ்தா என்ற பெயரில் வெளியான அந்தப் படம்தான் பாக்யாராஜ் இயக்கிய முதல் இந்திப் படம்.

பாக்யராஜின் வெற்றிப் படங்கள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஒரியா என்று பல மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதழாசிரியர்

திரைப்படத் துறையோடு எழுத்துலகிலும் தன் முத்திரையைப் பதித்த இவர் கடந்த இருபது ஆண்டுகளாக பாக்யா வார இதழின் ஆசிரியராக இருந்து வருகிறார். வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம் என்கிற சிறந்த புத்தகத்தை எழுதிய இவரது கைவண்ணத்தில் நீங்க நெனச்சா சாதிக்கலாம், உங்கள் பாக்யராஜின் கேள்வி – பதில் என பல புத்தகங்கள் வெளியாகியுள்ளன.

விருதுகள்

  • புதிய வார்ப்புகள் படத்தின் சிறந்த வசனத்திற்காகவும், தாய்க்குலமே தாய்க்குலமே படத்தின் சிறந்த திரைக்கதைக்காகவும் தமிழக அரசின் விருது பெற்ற இவர், ‘ஒரு கை ஓசை’ படத்தில் சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் விருதினைப் பெற்றார்.
  • பிலிம்பேர் மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளைப் பலமுறை பெற்றுள்ள கலைஞர் இவர்.

தனிப்பட்ட வாழ்க்கை

பாக்கியராஜ் 1981 ஆம் ஆண்டில் நடிகை பிரவீணாவை மணந்தார். “இன்று போய் நாளை வா”, “மௌன கீதங்கள்”, “பாமா ருக்மிணி” போன்ற பலபடங்களில் பாக்கியராஜுடன் நடித்திருந்தார் பிரவீணா. நடிகை பிரவீணா மஞ்சள் காமாலை நோய் காரணமாக 1983ஆம் ஆண்டில் மறைந்தார்.

சிறிது காலத்திற்கு பின் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவரும் இவரோடு டார்லிங் டார்லிங் திரைப்படத்தில் நாயகியாக நடித்தவருமான பூர்ணிமா ஜெயராமை இரண்டாவதாக மணந்தார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளனர். தனது மகள் சரண்யாவை பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் தன் இயக்கத்திலேயே கதானாயகியாக இவர் அறிமுகம் செய்தார். சரண்யா பாரிஜாதம் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை.

சாந்தனு “சக்கரக்கட்டி” படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.

அற்புதமான கலைஞர்

திரையுலக நியதிக்கேற்ப கதானாயகன் என்ற நிலையிலிருந்து ஒரு கால கட்டத்தில் குணச்சித்திர வேடங்களுக்கு மாறிய இவர், உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், உத்தம புத்திரன், வாகை சூட வா என எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

இப்போது துணை முதல்வர் என்ற படத்திற்கு கதை வசனம் எழுதி முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இவர், சாதாரண உதவி இயக்குனராக வாழ்க்கையைத் துவங்கி தமிழ்த் திரையின் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஒரு அற்புதமான கலைஞர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.