நாகதோஷமா, ஜலதோஷமா – சட்டப்பேரவையில் கலகல வாதம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாகதோஷம் குறித்து ஓ.பி.எஸ் கூறிய கருத்தால் சிறிப்பலை எழுந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு சுகாதாரத்துறை குறித்த உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்து அவருகிறார்.

இதனிடையே, பாம்பு கடி தொடர்பான விவாதத்தின்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பல மாவட்டங்களில் பாம்பு கடி அதிகமாக இருப்பதாகவும், அந்த பகுதிகளில் நாக தோஷம் இருப்பதாக தான் அறிந்ததாகவும் தெரிவித்தார். அதற்கு பரிகாரம் அல்லது பிரார்த்தனை ஏதேனும் இருந்தால் மேற்கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் அருண் ராஜ், தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு அறிவியல் பூர்வமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். பில்லி சூனியம், தோஷம் போன்றவற்றில் அரசுக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறினார்.

உறுப்பினருக்கு நம்பிக்கை இருந்தால் அவரது தொகுதியில் தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்தார். மேலும், மாநிலம் முழுவதும் அறிவியல் பூர்வமான முயற்சிதான் எடுப்போம் ஜலதோஷம் தான் அதிகமாக இருக்கிறது, பாம்பு கடி தோஷம் இருப்பதாக தெரியவில்லை என அமைச்சர் கூறினார்.

இதற்கு ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விரும்பினால் உரிய ஆளை அவரிடம் அனுப்பி வைப்போம் என நகைச்சுவையாக பதிலளித்தார்.

இதன் பின்னர் பேசிய அமைச்சர் அருண் ராஜ், தோஷத்தில் நம்பிக்கை இல்லை, விருப்பமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜுனா, பெரியார் இயக்கம் குறித்து பேசும் திமுகவினர் தற்போது தோஷம் குறித்து பேசுவதாக விமர்சித்தார். தாங்கள் பெரியார் வழிவந்தவர்கள் என்றும், அறிவியல் பூர்வமாக பிரச்சினைகளை அணுகுபவர்கள் என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தங்களது உறுப்பினர் உண்மையிலேயே ஜலதோஷம் பற்றித்தான் பேசியதாகவும், தங்களது துணைத் தலைவருக்கு ஜலதோஷம் இருப்பதால் அதற்கு தீர்வு காண வேண்டும் என்றுதான் அவர் கூறியதாகவும் தெரிவித்தார்.

இதற்கு சபாநாயகர், அவருக்கு ஜலதோஷம் என்றால் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ஒட்டிக் கொள்ளக்கூடாது எனக் கூற, சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.