குஷ்புவின் ட்விட்டர் பக்கம் முடக்கியது யார்? விவரங்களை கேட்டு சென்னை சைபர் கிரைம் போலீசார் ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம்.
பா.ஜ.க நிர்வாகியான குஷ்பு கடந்த 20ம் தேதி தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபுவை சந்தித்து புகார் ஒன்றை கொடுத்தார். அதில் “எனது டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டர் நிறுவனத்திடம் புகார் கொடுத்த பிறகும் எந்த பயனுமில்லை. எனது ட்விட்டர் பக்கத்தை தவறாக யாரும் பயன்படுத்தி விடக்கூடாது. எனது ட்விட்டர் பக்கத்தை முடக்கியவர்கள் யார் என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி” புகாரில் குஷ்பு தெரிவித்துள்ளார்.
இந்த புகார் மனு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்மிற்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் குஷ்பு கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குஷ்பு பயன்படுத்தி வந்த ட்விட்டர் பக்கத்தை மீண்டும் அவருக்கே கொடுக்கவும், அவருடைய டிவிட்டர் பக்கத்தை முடக்கியது யார் என்பது தொடர்பான விவரங்களை தரும்படி கேட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.








