தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அண்ணாதுரையின் கொள்கைகளை விட்டுவிட்டு, ஒரு பயங்கரவாதியுடனும் (பிரதமர் மோடி), சமத்துவத்தை நம்பாத ஒரு கட்சியுடனும் (பாஜக) அதிமுக எப்படி கூட்டணி வைக்கலாம்?” என்று கேள்வி எழுப்பினார். கார்கேவின் இக்கருத்து சர்ச்சை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இது தொடர்பாக கார்கே வெளியிட்ட விளக்கத்தில் “பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார், பயமுறுத்துகிறார் (Terrorise) என்ற பொருளிலேயே நான் பேசினேன். நான் அவரை நேரடியாகப் பயங்கரவாதி என்று சொல்லவில்லை, எனது கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன” எனத் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் கிரண் ரிஜிஜு தலைமையிலான பாஜக உயர்மட்டக் குழுவினர் இன்று கார்கேவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரில் கார்கே மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.







