ஈரானின் புதிய உச்ச தலைவராக காமேனியின் மகன் தேர்வு !

ஈரானின் புதிய உச்ச தலைவராக மறைந்த ஆயத்துல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனியை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக  மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார்.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதற்கிடையில்  88 உறுப்பினர்களைக் கொண்ட ஈரானின் நிபுணர்கள் சபை,  நாட்டின் புதிய உச்ச தலைவராக மறைந்த ஆயத்துல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனியை தேர்ந்தெடுத்துள்ளது.

நேற்று ஈரானின் அரசு ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையானது, “தீர்க்கமான வாக்கெடுப்பின்” அடிப்படையில் ஈரானின் உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அனைத்து ஈரானியர்களும் தலைமைக்கு விசுவாசமாக உறுதிமொழி எடுத்து ஒற்றுமையைப் பேண வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.

யார் இந்த மொஜ்தபா காமேனி……..? 

மொஜ்தபா காமேனி 1969 ஆம் ஆண்டு வடகிழக்கு ஈரானின் மஷாத் நகரத்தில் பிறந்தார். இவர் ஆயத்துல்லா காமேனியின் இரண்டாவது மகனாவார். ஈரானின் ஷியா இறையியல் கற்றல் மையமான கோமின் செமினரிகளில் படித்த அவர், ஹோஜ்ஜடோலெஸ்லாம் என்ற மதகுரு பதவியைப் பெற்றுள்ளார்.

மொஜ்தபா காமேனி தனது 17 வயதில், ஈரான்-ஈராக் போரில் சிறிது காலம் பங்கெடுத்துள்ளார். இஸ்லாமியக் குடியரசின் அரசாங்கத்தில் மொஜ்தபா ஒருபோதும் முறையான பதவியை வகித்ததில்லை. ஆனாலும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உள்ளிட்ட ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளில் அவர் செல்வாக்கு கொண்டவராக திகழ்கிறார்.

மொஜ்தபா காமெனி,  முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் கோலமாலி ஹடாத்-அடேலின் மகள் ஜஹ்ரா ஹடாத்-அடேலை 2004 இல் மணந்தார். இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.