கூட்டம் காரணமாக, காபூல் விமான நிலையத்தில் கேரள கன்னியாஸ்திரி ஒருவர் தவித்து வருவதாக, அவர் சகோதரர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கியதை அடுத்து,
தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். அங்கு அமைதியை விரும்புவதாகக் கூறிக் கொண்டே இப்போது பல்வேறு கட்டுப்பாடுகளை அவர்கள் விதிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால், உயிருக்குப் பயந்து அங்குள்ள வெளிநாட்டினர் தங்கள் தாய்நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானியர்கள் வெளிநாடுகளுக்கும் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆயிரக்கணக்கானவர்கள் விமான நிலையத்தில் குவிந்துள்ளதால், அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அவர்களைச் சமாளிப்பது அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுக்கு கடும் சவாலாக இருக்கிறது.
இந்நிலையில், கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரும் காபூல் விமான நிலையத்தில் சிக்கியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அருகில் உள்ள பெலா பெரியட்கா பகுதியை சேர்ந்தவர் தெரசா கிராஸ்டா (Theresa Crasta).
50 வயது கன்னியாஸ்திரியான இவர், காபூலில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்தார். தலிபான்கள் காபூலை நெருங்கியதுமே, இந்தியாவுக்கு திரும்புவதற்காக ஆகஸ்ட் 17 ஆம் தேதி விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், தலிபான்கள் 15 ஆம் தேதி, காபூலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். அதனால் தெரசா அங்கேயே இருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார்.
அவர் வசிக்கும் இடத்தில் இருந்து விமான நிலையில் 20 கி.மீ தூரத்தில் இருக்கிறது. அங்கு தலிபான்கள் செக்போஸ்ட் வைத்துள்ளனர். இதைத் தாண்டி அவர் விமான நிலையத்துக்கு சென்று சேர்ந்துள்ளார். ஆனால் விமான நிலையத்துக்குள் ஏராளமானோர் கூடியிருப்பதால், அவரால் விமான நிலையத்தின் உள்ளே செல்ல முடியவில்லை. இதை கேரளாவில் உள்ள தெரசாவின் சகோதரர் ஜான் தெரிவித்துள்ளார்.









