கெடிலம் அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களில் 5 சிறுமிகளின் உடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டன.
கடலூர் அருகே அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் அந்த பகுதியை சேர்ந்த பிரியா, மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் குளிக்க சென்றபோது நீர் அதிகம் தேங்கி உள்ளது தெரியாமல் ஆழமான பகுதியில் குளித்ததால் நீரில் மூழ்கி இறந்தனர்.
இந்தநிலையில் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது. இதில் 2 பேரின் உடல்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீதி 5 பேரின் உடல்களும் அ.குச்சிப்பாளையத்தில் உள்ள பொதுஇடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கிராம மக்களும், உறவினர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். ஒரே கிராமத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
இதைத்தொடர்ந்து 5 பேரின் உடல்களும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அதேபகுதியில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது உறவினர்களும், பெற்றோரும் கண்ணீர் விட்டு அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
முன்னதாக முதலமைச்சர் அறிவித்தப்படி தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினர். அப்போது 1 நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
7 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்தின் கடலூர் அருகே ஆற்றில் உள்ள தடுப்பணையில் மூழ்கி ஏழு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உருக்கும் சோகம். இத்தகைய நிகழ்வுகள் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி கெடிலம் ஆற்றில் மூழ்கி இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாகவும், குழந்தைகளை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.








