சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் மீன் வாங்க திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதிகாலை முதலே பழைய மீன்பிடி ஏலக்கூடம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட மீன் விற்பனை தளத்தில், மீன்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. தடுப்பு கட்டைகள் அமைத்து வியாபாரிகள் மீன்களை ஏலம் விடும் பணியில் ஈடுபட்டனர். சிறு வியாபாரிகள் சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும், சமூக இடைவெளியை கடைபிடித்து மீன் வாங்க ஏதுவாக, போலீசார் தனித்தனியாக மீன் விற்பனை கடைகளை அமைத்துக் கொடுத்தனர்.
மேலும், ஒலிபெருக்கிகள் மூலம் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக் கவசங்கள் அணியவும் அறிவுறுத்தி வருகிறார்கள். விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால், பெரிய வகை மீன்கள் வரத்து இல்லாமல், சிறிய மீன்கள் மட்டுமே அதிகம் விற்கப்படுகின்றன. ஒருசில இடத்தில் மட்டும் பெரிய வகை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்களும் ஆர்வமுடன் மீன்களை வாங்கி செல்கின்றனர்.







