பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை தேசியப் புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளித்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரிவு 16, பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நிதி சேகரிப்பு தடுப்புப் பிரிவு 17 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் என்ஐஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். 
இந்த வழக்கை டெல்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றம் விசாரித்து வருகிறது. காஷ்மீர் பிரிவினைவாதிகள் ஃபரூக் அகமது தர் (எ) பிட்டா கராடே, ஷப்பிர் ஷா, மசரத் ஆலம், யூசுஃப் ஷா, அஃப்தப் அகமது ஷா, அட்லஃப் அகமது ஷா, நயீம் கான், அக்பர் கன்டே, ராஜா மெஹ்ரஜுதீன் கல்வால், பஷிர் அகமது பட், ஜஹூர் அகமது ஷா வடாலி, ஷபிர் அகமது ஷா, அப்துல் ரஷீத் ஷேக் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
லஷ்கர் -இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீது மற்றும் ஹிஜ்புல் முஜாஹிதீன் தலைவர் சையது சலாஹுதீன் ஆகியோருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், யாசின் மாலிக்கை குற்றவாளியாக என்ஐஏ நீதிமன்றம் அறிவித்துள்ளது. தனது நிதி மதிப்பீடு தொடர்பாக பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு யாசின் மாலிக்குக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அபராதம் விதிப்பதற்காக யாசின் மாலிக்கின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறி, தீர்ப்பை மே 25-ஆம் தேதிக்கு சிறப்பு நீதிபதி பிரவீண் சிங் ஒத்திவைத்தார்.







