காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்த 26 சுற்றுலாப் பயணிகள்… காயமடைந்த தமிழர்களின் நிலை என்ன?

காஷ்மீர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்த தமிழர்களின் மருத்துவ நிலவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது .

ஜம்மு – காஷ்மீரில் பஹல்காம் மாவட்டத்தின் பைசரன் எனும் பகுதியில் உள்ள சுற்றுலா தளத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். 17 சுற்றுலா பயணிகள் காயங்களோடு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு தமிழர்களுடைய மருத்துவ நிலை என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

அதில் தமிழகத்தை சேர்ந்த 31 வயதான பரமேஸ்வர் என்பவர் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டு பஹல்காம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் , மற்றொரு தமிழரான சாண்டானோ (83) சுய நினைவற்ற நிலையில் ஜம்மு மருத்துவ கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை வெளியிட்ட தகவலின் படி மூன்று தமிழர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒருவர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் மன அழுத்தம் காரணமாகவே பாதிக்கப்பட்டிருந்ததாகவும், எனவே துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தது இருவர் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 17 பேரில் 11 பேர் உடல் நிலை சீராக உள்ளதாகவும் அவர்கள் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் மீதமுள்ள தமிழர்கள் இருவர் உள்ளிட்ட 6 பேர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.