சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கரூர் மாவட்டம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கான, 15 கிராமங்களில் உள்ள 3,084.95 ஏக்கர் நிலங்களுக்கு பதிவுத்துறை தரப்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலங்களை ஆக்கிரமித்திருந்த சுமார் 3,390 நபர்கள் அளித்திருந்த மனுக்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கரூர் மாவட்ட ஆட்சியர், பதிவுத்துறை விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார். இது முன் அனுமதி பெறாமல் கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய வழிவகை செய்கிறது. அது செல்ல தக்கது அல்ல. எனவே பதிவுத்துறை விதித்திருந்த தடையை நீக்கி, கரூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், மற்றும் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகிய மூவரும் ஒரே நாளில் தடை உத்தரவை நீக்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்” என்று வாதிடப்பட்டது.
அரசுத்தரப்பில், “80ஆம் நூற்றாண்டுகளில் சில இனாம் நிலங்கள் கோவில்களுக்கு வழங்கப்பட்டன. 1965 மற்றும் 67ஆம் ஆண்டுகளில் ரயத்துவாரி பட்டாக்கள் வழங்கப்பட்டு, பலருக்கு மாற்றியும் விற்பனை செய்யபட்டது. இது தொடர்பாக விசாரித்ததில், “60 ஆண்டுகளுக்கும் மேலாக, மனு அளித்த நபர்கள் அங்கு வசிப்பது தெரியவந்தது. அவர்கள் கோரிக்கையின் அடிப்படையிலேயே, தடை நீக்கப்பட்டது. கோவில் தரப்பும் குழுவில் இணைந்தே முடிவெடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்பில்லாத மூன்றாம் நபர் வழக்கு தொடர இயலாது. ஆகவே இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “சம்பந்தப்பட்ட நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன? என்பது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுத் தரப்பில் ஜூலை 29ஆம் தேதி விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 11ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தனர்.




