வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்த 10 பேரின் உடல்கள் தமிழகம் வந்தடைந்தது!

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியான 10 பேரின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களில் இருந்து மொத்தம் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் வியட்நாமுக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். கடந்த 11-ம் தேதி மதியம் வியட்நாமின் புகழ்பெற்ற ஃபூ குவொக் தீவிற்கு அருகே உள்ள ‘ஹான் மே ரட் நிகோய்’ தீவிலிருந்து ‘அன் தோய்’ துறைமுகத்தை நோக்கி அதிவேக சுற்றுலாப் படகில் அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தமிழ் நாட்டை சேர்ந்த 10பேர் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர், கேரளத்தில் இருந்து 2 பேர், ஆந்திராவில் இருந்து 3 பேர் என 15 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் தீவிரமாக மேற்கொண்டது.

இந்த நிலையில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியான 10 பேரின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டன. மும்பையில் இருந்து விமானம் மூலம் 4 பேரின் உடல்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. மீதம் 6 பேரின் உடல்கள் கோவை சென்றடைந்தது. அயலகத் தமிழர் நல வாரிய அதிகாரிகள் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரவர்களின் சொந்த ஊருக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.