தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி பொதுச்செயலாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கடந்த திமுக அரசின் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டால் கிடப்பில் போடப்பட்டு பலமாதங்களாக நகர்த்தப்படாமல் திசையறியாது தீர்வறியாது இருந்த சமத்துவத்தலைவர் என மக்களால் கொண்டாடப்பட்ட எனது கணவரின் கொலை வழக்கு விசாரணையை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும் வகையில், நாங்கள் தொடர்ந்து கேட்டு வந்த CBI விசாரணையே நடைபெறும் வகையில் வழிவகுத்து வழிவிட்டு உச்சநீதிமன்றத்திலான மேல்முறையீட்டை வாபஸ் பெற்ற தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் எனது கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதை எங்களது இடைவிடாத சட்டப்போராட்டத்திற்கான முதல் மற்றும் முக்கிய வெற்றியாகக் கருதுகிறேன்.
இவ்வேளையில், எனது கணவரும் எங்கள் தலைவருமான சமத்துவத்தலைவர் படுகொலை செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை CBI விசாரணை வேண்டும் என்று என்னுடன் தொடர்ந்து வலியுறுத்தி உரத்த குரல் எழுப்பி வந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் பல்வேறு அமைப்பினருக்கும் வழக் கறிஞர்களுக்கும் சமூக செயல்பாட்டாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




