புதிய மின் மயானம் அமைக்கப் பூமி பூஜை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து
கையில் கருப்பு கொடி உடன் கண்களை கட்டிக்கொண்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
பல்லடம் அருகே, பச்சாபாளையத்தில் புதிய மின் மயானம் அமைக்க பூமி பூஜை
நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கையில் கருப்பு கொடி உடன் கண்களை
கட்டிக்கொண்டு பொதுமக்கள் போராட்டம். திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில்
18 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர்.
வளர்ந்து வரும் பல்லடம் நகரத்தில் மின் மயானம் இல்லாததால் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திருப்பூர்,கொடுவாய் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்னிலையில் பல்லடம் நகராட்சி கூட்டத்தில் பச்சாபளையத்தில் தமிழக அரசின்
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1.45 கோடி மதிப்பில் நவீன எரியூட்டு
மின் மயானம் அமைக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அப்பகுதியை
சேர்ந்த ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் மற்றொரு தரப்பினர் கடும்
எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
நவீன எரியூட்டு மின் மயானம் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டால்
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பல்வேறு விதமான நோய் தொற்று ஏற்படும்
எனவும், 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்,அரசு பள்ளி அமைந்துள்ளது என கூறி
தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில
மாதங்களுக்கு முன்பு அளவீட்டு பணிக்கு வந்த அரசு அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தி
போராட்டத்தில் ஈடுபட்டு திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அளவீட்டுப் பணிகள் முடிக்கப்பட்டு,
இன்று புதிய மின் மயானம் அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற இருந்தது.
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சார்பில் , நீதிமன்றத்தில்
வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் பூமி பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும்
மேற்பட்ட பொதுமக்கள் கண்களில் கருப்பு துணியை கட்டி கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூமி பூஜை நடத்த கூடாது எனவும் எங்களுக்கு மயானம் வேண்டுமென, கோஷமிட்டபடி பூமி பூஜை நடைபெறும் இடத்தை முற்றுகையிட முயன்ற பொது மக்களை, போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் தலைமையில் புதிய மின் மயானம் அமைப்பதற்கான பூமி பூஜை விழா நிறைவடைந்தது.
எதிர்ப்பை மீறி பூமி பூஜை விழா நடைபெற்றதால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போராட்டத்தைக் கைவிடுமாறு பல்லடம் காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
கு. பாலமுருகன்