முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

கருணாநிதி எதிர்நீச்சல் கற்றுக்கொண்ட “கமலாலய குளம்”


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

கல்விக்காக கருணாநிதி தனது உயிரை துறக்கவும் துணிந்ததை பார்த்த சாட்சியாகவும், எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் மனஉறுதியை  அவருக்கு அளித்த எதிர்நீச்சலை கற்றுக்கொடுத்த  காட்சியாகவும் தமிழக அரசியல் வரலாற்றில் பதிந்ததுள்ளது அந்த குளம். அதுதான் திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் தெப்பக்குளமான கமலாலய குளம். சென்னையில் இருக்கும் கமலாலாயம் (தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகம்) வேண்டும் என்றால் அரசியல் ரீதியில் கசப்பான பல நினைவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்திருக்கலாம். ஆனால் திருவாரூரில் உள்ள இந்த கமலாலயமோ அவரது நெஞ்சில் பசுமையான நினைவுகளையே  அசைபோட வைக்கிறது. அந்த குளத்தின் மெல்லிய அலைகளோடு அலைகளாக முதலமைச்சரின் சிறுவயது நினைவலைகளும் கலந்து ஐக்கியமானதை  குளத்தின் கரையில் அமர்ந்து அவர் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் நமக்கு உணர்த்துகிறது.

மாவட்ட வாரியாக சென்று மக்கள் நிலத் திட்டங்கள் சிறப்பான முறையில் நிறைவேற்றப்படுகிறதா என கள ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி பிறந்த திருவாரூர் மாவட்டத்திலும் அந்த பணிகளை மேற்கொண்டார். அப்போது திருவாரூர் அருகே உள்ள காட்டூரில் தனது பாட்டியும் கருணாநிதியின் தாயாருமான அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்,  பின்னர் திருவாரூர் திரும்பி அங்குள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஆய்வு செய்தார். பின்னர் திருவாரூர் தியாகராஜர் கோயில் சந்நிதி தெருவுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து மனுக்களை பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திடீரென அருகேயிருந்த திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பக்குளமான கமலாலயத்திற்கு சென்று குளக்கரையில் அமர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கினார். அந்த குளத்தோடு பதிந்திருந்த  கருணாநிதியின் சிறுவயது நினைவுகளை அருகேயிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோருடன் அசைபோட்டார். படகு மூலம் குளத்தின் நடுவில் இருந்த நடுவண் கோயிலுக்கு சென்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

“இது குளம் மட்டுமல்ல கலைஞர் சொன்ன பாடம். இன்று அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்ந்தபோது, குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள். நெஞ்சத்தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர். கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் ‘தோற்றமளிக்கும்’. ஆனாலும் அது குளம்தான். அதன் ‘நடுவண்’ கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர்”

இப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நெகிழவும், மகிழவும் வைத்த கமலாலய குளம், கருணாநிதி என்கிற வரலாற்றின் முதல் அத்யாய நினைவுகளை தன்னுள்ளே ஆழமாக பதிந்து வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்காக எத்தனையோ திட்டங்களை தமது ஆட்சி காலத்தில் நிறைவேற்றிவர் கருணாநிதி, அந்த கல்விக்காக உயிரை மாய்த்துக்கொள்ளவும் அவர் துணிந்ததற்கு இந்த கமலாலய குளமே சாட்சி.

கருணாநிதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்குவளையில் பிறந்தாலும், திருவாரூரிலேயே அவரது இளமைப் பருவம் பெரும்பாலும் கழிந்திருக்கிறது. 1936ம் ஆண்டு திருவாரூர் உயர் நிலைப்பள்ளியில் படிக்க வேண்டும் என்கிற ஆவலோடு வந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பள்ளியில் சேர்வதற்கான முதல்படிவ, இரண்டாம் படிவ பரிட்சை எழுதியும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. பிற்காலத்தில் ஏராளமான மாணவர்களின் கல்வி கனவுகளை நிறைவேற்றும் அளவிற்கு சட்டதிட்டங்களை இயற்றிய கருணாநிதிக்கு அப்போது கல்வி உரிமை  மறுக்கப்பட்டது.  இதனால் மனம் வெதும்பினார் 12வயது சிறுவனாக இருந்த கருணாநிதி. எப்படியாவது அந்த பள்ளியில் இடம்பெற்றே வேண்டும் என்கிற துடிப்போடு இருந்த கருணாநிதி பியூன் தடுத்தும் கேட்காமல் தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்து அவரிடம் முறையிட்டார்.

” இடமில்லை என்று சொன்ன பிறகு எப்படியப்பா முடியும்?முடியாதப்பா முடியாது!” என்று கைவிரித்திருக்கிறார் அந்த தலைமை ஆசிரியர்.

அப்போது ” முடியாதா? இதோ உங்கள் கண் முன்னாலேயே எதிரே உள்ள தெப்பக்குளத்தில் விழுந்து உயிரைமாய்த்துக்கொள்ளப்போகிறேன்” என கருணாநிதி கூறவும் தலைமை ஆசிரியருக்கு அதிர்ச்சி. அந்த தெப்பக்குளத்தில் விழுந்து பல உயிர்கள் பலியாகியிருப்பது அவருக்கு நினைவுக்கு வந்துபோனது.  மேலும் கல்வியில் 12வயதான அந்த சிறுவனுக்கு இருந்த ஆர்வமும் அவரை வியக்க வைத்தது. இதையடுத்து கருணாநிதியை தட்டிக்கொடுத்து அவரை ஐந்தாம் வகுப்பில் சேர்த்துக்கொண்டார்.  இதனால் தனது கல்வி உரிமையை மீட்டெடுத்த மகிழ்ச்சியோடு தனது தந்தையிடம் சென்று இந்த செய்தியை பகிர்ந்து உற்சாகம் அடைந்திருக்கிறார் கருணாநிதி. அந்த உற்சாகத்தை படிப்பிலும் காண்பித்து, அந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பில் முதன்மை மாணவனாக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார் கருணாநிதி.

அரசியல் வரலாற்றில் கடுமையான எதிர்ப்புகளையும், இன்னல்களையும் எதிர்கொண்டு எதிர்நீச்சல்போட்டு, எதையும் தாங்கும் இதயத்தோடு வெற்றிக்கொடி நாட்டியவர் கருணாநிதி.  அந்த கருணாநிதிக்கு எதிர்நீச்சல் போட கற்றுக்கொடுத்த இடம் இந்த கமலாலய தெப்பக்குளம்.

”எனக்கு எத்தனையோ நண்பர்கள் இருந்தாலும், நண்பர் என்கிற அந்தஸ்தில் நான் முதல் இடத்தில் வைத்து பார்ப்பவர் தென்னன்” என்று கருணாநிதி நெகிழ்ந்திருக்கிறார். அந்த தென்னனுடன்தான் அவரது பள்ளிப்பருவ நாட்கள் பெரும்பாலும் கடந்திருக்கின்றன. கருணாநிதியும், தென்னனும் இந்த தெப்பக்குளத்தில் எதிர்நீச்சல் பயிற்சியை எடுப்பார்கள். படகு உதவி இல்லாமல் நீந்தியே சென்று குளத்தின் நடுவில் உள்ள நடுவண் கோயிலின் படிக்கட்டுக்களை தொட்டுவிட வேண்டும் என்பது அவர்களின் இலக்காக இருக்கும். அப்படி ஒருமுறை நீந்தும்போதும், இருவரும் பாதி தூரம் வந்த பிறகு உடல் மிகவும் சோர்வாகியிருக்கிறது. கரைக்குத் திரும்பிச் சென்றுவிடலாமல் என தென்னன் கூற ”பாதி தூரம் வந்துவிட்டோம் இனி மீதி தூரத்தையும் கடந்துவிடுவோம்” என மன உறுதியோடு கூறியிருக்கிறார் கருணாநிதி. ஆனால் தென்னனின் உடல் சோர்வு அவரை மீண்டும் கரைக்கு திரும்பவைத்தது. எனினும் கருணாநிதி மன உறுதியோடு தொடர்ந்து எதிர் நீச்சல் அடித்துச் சென்று அக்கரையை அடைந்திருக்கிறார். தாம் அரசியலில் வளர்ந்து முதலமைச்சர் ஆன பிறகு கமலாலய குளத்தை சீரமைக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார் கருணாநிதி.

கமலாலய குளத்திற்கும் தனது பால்ய பருவத்திற்கும் உள்ள நெருங்கிய பந்தத்தின் நினைவலைகளை தாம் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் கருணாநிதி. இப்படி தனது தந்தை கருணாநிதியின் சிறுவயது நினைவுகளும், தனது சிறுவயது நினைவுகளும் சங்கமிக்கும் திருவாரூர் கமலாலய குளத்தில்தான் ஆர்வத்தோடு அமர்ந்து இளைப்பாறி பழைய நினைவுகளை அசைபோட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கருணாநிதி பணியாற்றிய சேலம் மார்டன் தியேட்டர்ஸ் முன்பு சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த செல்ஃபி இணையத்தில் வைரலானதுபோல் தற்போது கமலாலய குளத்தின் கரையில் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருக்கும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

-எஸ்.இலட்சுமணன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆட்சி முழுமையாக நீடிக்கும்: ஏக்நாத் ஷிண்டே

Mohan Dass

மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி !

Halley Karthik

2023 ஆஸ்கர் விழா : வாக்கு செலுத்திய ஸ்கீரின்ஷாட்டை பகிர்ந்து சூர்யா மகிழ்ச்சி

Web Editor