கருணாநிதியின் சிலையைப் பார்த்த உடன் நெஞ்சம் உருகிவிட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்துவைத்தார். அதன்பிறகு கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுகவின் தோழமைக் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்வில் உரையாற்றிய துரைமுருகன், “திராவிட இயக்கத்தை 50 ஆண்டு காலம் தன் தோளில் சுமந்த தலைவர் கருணாநிதி. அவரின் சிலையை திறந்து வைத்து நம்மையெல்லாம் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளார் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு. நம்மைப் பொறுத்தவரை இந்நாள் ஒரு பெருநாள். கருணாநிதியின் சிலையைப் பார்த்த உடன் நெஞ்சம் உருகிவிட்டது. நேரில் பேசுவதைப் போலவே சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையைப் பார்த்து விட்டு கண்ணீர் விடாமல் வெளியே வரமுடியவில்லை” என்று நெகிழ்ந்தார்.
ஓமந்தூரார் தோட்டத்தை சட்டப்பேரவை நடைபெறும் இடமாக மாற்றி, ஒவ்வொரு செங்கல்லாக பார்த்து பார்த்து கட்டடம் எழுப்பியவர் கருணாநிதி, அப்போது நான் பொதுப்பணித்துறை அமைச்சர். கட்டிடம் கட்டும் வேலை எனக்கு, அதற்கு யோசனை சொன்னவர் கருணாநிதி. அவரின் கனவு நனவாகிவந்த நிலையில், அதை மாற்றிவிட்டனர். அவரின் சிலையை வைக்க பொருத்தமான இடத்தை தேர்வு செய்தவர் ஸ்டாலின்.
அப்பாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கிறார் ஸ்டாலின். உங்கள் அறிவுக்கு முன் நாங்கள் இளையவர்கள் என்ற துரைமுருகன், “கருணாநிதியின் சிலையை நீங்கள் திறந்துவைத்தது வரலாற்று நிகழ்வு. சிலை இருக்கும் வரை உங்கள் பெயரும் வரலாற்றில் நிலைத்திருக்கும்” என்று வெங்கைய்யா நாயுடுவை பார்த்து பேசினார்.
மேலும், “டெல்லியில் எந்த நிலையிலும் வேட்டி கட்டுபவர்கள் இரண்டே பேர் தான். ஒன்று நீங்கள், இன்னொன்று ப.சிதம்பரம். ஆந்திராவைச் சேர்ந்தாலும் மண் வாசனையுடன் பங்கேற்றுள்ளீர்கள். கருணாநிதியை கைது செய்த உடன் திமுக அலுவலகம் வந்து வாஜ்பாய்க்கு போன் போட்டு துடித்தவர் வெங்கைய்யா நாயுடு. அதுதான் கருணாநிதி சிலை திறக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளது” என்றும் பேசி முடித்தார்.