முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்துவைத்தார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் சிலை அமைக்கப்படும் என ஏப்ரல் 26ஆம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்துவைத்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் சிலை அமைக்கப்படும் என ஏப்ரல் 26ஆம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி அண்ணா சாலையில் கருணாநிதி பார்த்துப் பார்த்து கட்டிய தலைமைச் செயலக கட்டிடம் அருகே  அவரது சிலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதற்காக வருகை தந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க திமுக தொண்டர்கள் திரளாகக் கூடியிருந்தனர். குடியரசு துணைத் தலைவரை முதலமைச்சர் பொன்னாடை அணிவித்து அழைத்து வந்தார். a karunanidhi life என்ற நூலையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மங்கள இசை முழங்க  கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் திறந்துவைத்தார். பின்னர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் சிலை முன்பாக நின்று செல்பி எடுத்துக்கொண்டனர்.  சிலையின் பீடத்தில் கருணாநிதியின் ஐம்பெரும் முழக்கங்களான அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், இந்தித் திணிப்பை எதிர்ப்போம்,  வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம், மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சி ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன.
1975 ஆம் ஆண்டுக்குப் பிறகாக 2022 இல் சென்னை அண்ணா சாலையில் மீண்டும் அமைகின்றது கருணாநிதியின் சிலை.  16 அடி உயரத்தில் கருணாநிதிக்கு இதுவரை நிறுவப்பட்ட சிலைகளிலேயே உயரமானதாகவும், வெண்கல சிலையாகவும் இது அமைந்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.