நவீன தமிழ்நாட்டின் தந்தை கருணாநிதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்துவைத்தார். அதன்பிறகு கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வாழ்வில் ஓர் பொன்னாள், எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நன்னாள் இது. தமிழ் நிலத்தை வான் உயரத்துக்கு உயர்த்திய தலைவர் கருணாநிதிக்கு 16 அடி உயர சிலை எழுப்பப்பட்டுள்ளது. பெரியார், அண்ணாவுக்கு இடையில் கருணாநிதியின் சிலை மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. கருணாநிதியால் கம்பீரமாக, கனவுக்கோட்டையாக உருவாக்கப்பட்ட கட்டடத்திலேயே அவரின் சிலை எழுப்பப்பட்டுள்ளது” என்றார்.
2001ம் ஆண்டு அப்போதைய ஆட்சியாளர்களால் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, கே.ஆர்.நாராயணன், வாஜ்பாய் ஆகியோர் துடிதுடித்துப் போயினர். அப்போது அவரின் கைதுக்கு காரணமானவர்களை கடுமையாக விமர்சித்தவர் தான் இன்றைய குடியரசு துணைத் தலைவர். கலைஞரின் திருவுருவ சிலையை திறந்து வைக்க யாரை அழைக்கலாம் என நினைத்தபோது எனது மனதில் வந்தது குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவின் முகம் தான் என்று குறிப்பிட்ட முதலமைச்சர்,
“கருணாநிதியின் சிலையை திறந்து வைக்க கேட்ட உடன், மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு. கருணாநிதியின் சிலையை வெங்கையா நாயுடு திறந்துவைத்தது சாலச் சிறந்தது” என்றும் கூறினார்.
மேலும், “இந்தியாவில் பல குடியரசுத் தலைவர்களையும், நிலையான ஆட்சியையும் உருவாக்க துணை நின்றவர் கருணாநிதி. அத்தகைய மாமனிதருக்குத் தான் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி பன்முகத்தன்மை கொண்டவர். எந்த துறையில் பயணித்தாலும் அதில் கோலோச்சியவர்.நாம் காணும் நவீன தமிழ்நாடை உருவாக்கியவர்.
அடக்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி. அவரின் திட்டங்களால் உருவானதே இன்றைய தமிழ்நாடு. நவீன தமிழ்நாட்டின் தந்தை கருணாநிதி. அவரால் உயர்ந்தவர்கள் ஏராளம். தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் கருணாநிதியின் திட்டங்களால் பயன்பெற்றவர்களே. அவருக்கு தான் இன்று சிலை திறக்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு எத்தனை சிலை அமைத்தாலும் ஈடாகாது. முன்னர் கருணாநிதியின் சிலையை அகற்றியபோதும் அவருக்கு கோபம் வரவில்லை; கவிதை தான் வந்தது. கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சங்களில் கருணாநிதி வாழ்ந்து கொண்டே இருப்பார் என பேசி முடித்தார்.