விவசாயிகள் நலனை பிரதானமாக கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் காலோல் நகரின் இஃப்கோவில், 175 கோடி ரூபாய் செலவில் உலகின் முதல் நானோ யூரியா திரவ உரத்தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பேசினார். அப்போது பேசிய அவர், நானோ யூரியா திரவ உரம் மூலம் விவசாயிகளின் பெரும் பொருட்செலவு தவிர்க்கப்படும். மேலும் இந்த திரவ உரம் மூலம் மகசூல் அதிகரிக்கும். எனவே நாடு முழுவதிலும் இந்த நானோ யூரியா திரவ தொழிற்சாலை கூடுதலாக 8 நிறுவப்படவுள்ளதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், உலக அளவில் யூரியாவை இறக்குமதி செய்வதில் நம் நாடு இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும், ஆனால் யூரியா உற்பத்தி செய்வதில் நாம் 3ம் இடத்தில் இருப்பதாகவும், எனவே யூரியாவின் தேவையை கருத்தில் கொண்டு அதன் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் உலக அளவில் ஏற்பட்ட தொய்வு காரணமாக யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் மத்திய அரசு விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு யூரியா இறக்குமதி செய்ததோடு, விவசாயிகளுக்கு விலையையும் குறைத்து கொடுத்தது. மத்திய அரசு (பாஜக) எப்போதும் விவசாயிகளின் நலனையே பிரதானமாக கொண்டு செயல்பட்டு வருவதாக கூறினார்.
முன்னர் பல ஆண்டுகளாக நாம் யூரியாவை அதிக அளவில் இறக்குமதி மட்டுமே செய்து வந்த நிலையில் தற்போது யூரியாவின் உற்பத்தி பெருக்கப்பட்டுள்ளது. மேலும் திரவ யூரியாவும் உற்பத்தியும் தற்போது செய்யப்படுகிறது.
இப்போது நாம் பயன்படுத்தும் யூரியாவில் நான்கில் ஒரு பங்கு இறக்குமதி செய்கிறோம். இந்த நிலையை மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மூடப்பட்ட பல உர தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அனைவருக்கும் தேவையான அளவு யூரியா உரம் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்த அரசின் தாரக மந்திரம் என்பது அனைவரும் சேர்ந்து ஒருங்கிணைந்த வளர்ச்சியே ஆகும் என தெரிவித்தார்.