நாடாளுமன்ற சிறப்புரிமையை சிபிஐ மீறியுள்ளது: கார்த்தி சிதம்பரம்

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்குள்ள சிறப்புரிமையை சிபிஐ மீறியுள்ளதாக கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்குவதற்காக 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்…

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்குள்ள சிறப்புரிமையை சிபிஐ மீறியுள்ளதாக கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்குவதற்காக 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய 16 மணி நேரத்திற்குள் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று அவர் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது, அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2வது நாளாக கார்த்தி சிதம்பரம் இன்றும் விசாரணையில் ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், பொய் வழக்குகளைப் போட்டு காங்கிரஸ் எம்பிக்களின் குரல்களை மத்திய அரசு ஒடுக்கப் பார்ப்பதாகக் குற்றம்சாட்டினார். சிபிஐ ரெய்டின்போது, தான் அங்கம் வகிக்கும் நாடாளுமன்றக் குழு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாகவும், அவற்றை கைப்பற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும் தெரிவித்த கார்த்தி சிதம்பரம், இது தொடர்பாக நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளதாகத் தெரிவித்தார்.

ஜனநாயகத்திற்கு எதிரான இத்தகைய தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்படுவதாகவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.