கர்நாடகா தேர்தல் – கவரும் தேர்தல் அறிக்கை…. மக்கள் தீர்ப்பு என்ன…?

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் பேசுபொருளாகியுள்ளன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்… தென்னிந்தியாவில்…

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் பேசுபொருளாகியுள்ளன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்…

தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெறுகிறது. ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவும், மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளமும் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக, பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

குறிப்பாக பாஜகவிற்காக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்டோரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், பிரியாங்கா, மாநிலத் தலைவர் சிவக்குமார், சித்தராமையா, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா, முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாநிலத் தேர்தல் போல் இல்லாமல், மக்களவைப் பொதுத்தேர்தல் போல் தேசிய அளவில் இந்த தேர்தல் பேசப்படுகிறது. தலைவர்களின் தீவிர பிரச்சாரம் ஒருபக்கம் இருக்க, கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும், அதில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகளும் கவனம் ஈர்த்துள்ளன.

குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை

குறிப்பாக, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பாகவே, ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி, இல்லத்தரசிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய், பட்டதாரிகளுக்கு ரூ.1500 ரூபாய் உதவித் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தனர். பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ’’பெண்களுக்கு இலவச பேருந்து சேவை, ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் தலா ஒரு கோடி, மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு, ஒரு லட்ச ரூபாய் வட்டியில்லா கடன், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.25 மானியம்’’ ஆகிய வாக்குறுதிகளையும் அளித்துள்ளார். இவை பெரிதும் கவனம் பெற்ற நிலையில், கூடுதலாக இட ஒதுக்கீட்டு உச்சவரம்பு 75 சதவீதமாக உயர்த்துவது, மாநிலத்திற்கு தனி கல்விக் கொள்கையை உருவாக்குவது என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

பாஜக-வின் இலவச அறிவிப்புகள்

இலவசங்கள், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை விட ஆக்கப்பூர்வமான திட்டங்களை அளிப்போம் என்ற ஆளும் பாஜக, உணவு, கல்வி, சுகாதாரம், வருவாய், பாதுகாப்பு, வளர்ச்சி என ஆறு பிரிவுகளாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 3 சிலிண்டர் இலவசம். ஏழைகளுக்கு இலவச பால், தானியங்கள், கேஸ் இணைப்புகள், 10 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு இலவச வைப்பு நிதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.

இது மட்டுமின்றி பொது சிவில் சட்டம், கோயில்களை புனரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் உள்ளிட்டவற்றையும் அறிவித்துள்ளனர். இவை தவிர, உத்திரப்பிரதேசம் போன்ற பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டுவது, இட ஒதுக்கீட்டு கொள்கையில் திருத்தம் உள்ளிட்டவையும் அக்கட்சியின் கொள்கையாக இருக்கிறது. மேலும், ‘இலவசங்களை தரும் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என பிரதமர் மோடி பேசிய அடுத்த சில நாட்களில் இலவசங்களை அறிவித்துள்ள பாஜகவின் அறிக்கை விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது

இரண்டு கட்சிகளுக்கும் களத்தில் சவாலாக உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தேர்தல் அறிக்கையில், ’’ஆண்டுக்கு 5 இலவச எரிவாயு சிலிண்டர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவித் தொகை, விவசாயிகளுக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது. விவசாயியை மணக்கும் பெண்ணுக்கு ரூ.2 லட்சம் உதவித் தொகை என்று அக்கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி கட்சி, சிறந்த அரசு பள்ளிகள், 300 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை உள்ளிட்ட டெல்லி மாடல் ஆட்சியின் வாக்குறுதிகளை சொல்லியுள்ளது.

தமிழ்நாடுபோல் தேர்தல் அறிக்கை

இவற்றில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள், குறிப்பாக தேசியக் கல்விக் கொள்கையை நிராகரித்து விட்டு, தமிழ்நாடு போல் மாநிலத்திற்கு தனி கல்விக் கொள்கை, இட ஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம், மாநிலத்திற்கான வருவாய் பங்கீடு உள்ளிட்டவை தமிழ்நாட்டு தேர்தல் அறிக்கை போல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கூட்டணிக் கட்சியான திமுகவை தேசிய கட்சியான காங்கிரஸ் பின்பற்றியுள்ளதோ என்கிற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த தேர்தல் அறிக்கை மக்களிடம் கவனம் பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்துதான் பாஜகவும் தங்களது தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

காங்., பாஜக விமர்சனம்

காங்கிரஸ் கட்சியின், ட்விட்டர் பக்கத்தில், ‘’கடந்த தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் எத்தனை பா.ஜ.க, நிறைவேற்றியுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். அதற்கு பிறகு இந்த தேர்தல் அறிக்கை குறித்து பேசட்டும். பாஜகவின் தேர்தல் அறிக்கை ஒரு கட்டுக்கதை, இறந்தவரின் ஜாதகம் போன்றது…’’ என்று விமர்சித்துள்ளது.

ஆனால், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளிப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’பாஜகவின் தேர்தல் அறிக்கை வளர்ச்சியை மையப்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டு கால ஆட்சியின் சிறந்த பணிகளுக்கு ஏற்றார் போல் உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக் கணிப்புகள்

தலைவர்களின் பிரச்சாரங்கள், வாக்குறுதிகள், கள நிலவரம் உள்ளிட்டவற்றைக் கவனத்தில் கொண்டு பல்வேறு கருத்து கணிப்புகளும் வெளியாகி வருகின்றன. மொத்தம் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகத்தில் 113 இடங்களில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் 120-130 இடங்கள் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், பாஜக 70 இடங்களுக்கு மேலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 30 இடங்களுக்கு மேலும் பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

கட்சிகளின் நம்பிக்கை

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘’கர்நாடகத்தில் 40 பர்சண்டேஜ் ஆட்சி நடக்கிறது. ஆகையால் ஆளும் பாஜகவிற்கு 40 இடங்களுக்கு மேல் கிடைக்காது. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி 150 இடங்களில் வெற்றி பெறும்’’ என்கிறார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் பாஜகவினர், ‘’இரட்டை இன்ஜின் ஆட்சியால் கர்நாடகம் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆகையால், 130 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைப்போம்’’ என்கிறார்கள்.
ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தளத்தினர் தங்கள் கணிப்பாக, ’’யாருக்கும் வெற்றி கிடைக்காது. ஆகையால், கணிசமான இடங்களில் வெற்றி பெறும், நாங்கள் தான் ஆட்சியைத் தீர்மானிப்போம். ஆட்சி அமைப்போம்.’’ என்கின்றனர்.

கவரும் வாக்குறுதிகள், திரளும் தொண்டர்கள், கருத்து கணிப்புகளைக் கடந்து மக்கள் தீர்ப்பு என்னவாக இருக்கும்? காத்திருப்போம் மே 13ம் தேதி வரை….

இது குறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் சொல் தெரிந்து சொல் பகுதியில் வெளியான காணொளியைக் காண..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.